பக்கம்:சுயம்வரம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

சுயம்வரம்


புத்தி இப்படித்தான் பேதலித்துக் கொண்டிருக்கிறது!" என்றாள் அவள், தன் நெற்றியை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு.

"ரொம்பக் கெட்டதாச்சே, அது!"

"கெட்டதா! என்ன ஆகும்?"

"கடைசியில் அது உன்னைக் கீழ்ப்பாக்கத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தாலும் சேர்த்துவிடும்."

"ரொம்ப நல்லதாச்சே சார், அது! பற்றற்ற நிலைக்கு ஒரு மனிதன் எப்போது ஆளாகிறான், தெரியுமா?"

"தெரியும்; பைத்தியம் பிடிக்கும்போது!"

"அந்த மேலான நிலைக்கு என்னை நீங்கள் உயர்த்த விரும்புவது பற்றி மெத்த மகிழ்ச்சி."

இதைச் சொன்னபோது அருணாவின் கண்கள் உண்மையிலேயே கொஞ்சம் கலங்கின. அதைப் பார்த்த மாதவனின் மனமும் கொஞ்சம் நெகிழ்ந்துவிட்டது. அந்த நெகிழ்ச்சியின் வசப்பட்டு அவன் சொன்னான்:

"மகிழ்ச்சிக்கு அங்கே இடமில்லை அருணா, விரக்திக்குத்தான் இடம் உண்டு."

"எதுவாயிருந்தால் என்ன, அதிலும் இன்பம் காண முடியும் என்னால். எல்லாம் அவரவர்களுடைய மனத்தைப் பொறுத்தது. மனம் மட்டும் சரியாக இருந்தால் நிறைவேறிய கனவில் மட்டுமல்ல, நிறைவேறாத கனவிலும் இன்பம் காணலாம்."

"அந்த அளவுக்கு உன் மனம் பக்குவம் அடைந்திருக்குமானால், என்னை நீ காதலிப்பதைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/73&oldid=1384719" இலிருந்து மீள்விக்கப்பட்டது