பக்கம்:சுயம்வரம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

77

"எந்தக் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறாய், நீ?"

"உன்னால் காதலிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட பெண்களின் கண்ணீர் வெள்ளத்தைச் சொல்கிறேன்!"

'ஹஹ்ஹஹ்ஹா!' என்று ஆனந்தன் சிரித்தான்; "என்ன ஹஹ்ஹஹ்ஹா?" என்று மாதவன் கேட்டான்.

"பெண்கள்! ஹஹ்ஹஹ்ஹா, பெண்கள்!" என்று அவன் மேலும் சிரித்துவிட்டு, “என்னதான் சொன்னாலும் இந்தப் பெண்களுக்கு ஒரு உண்மை மட்டும் புலப்படவே மாட்டேன் என்கிறது! அவர்கள் காதலிக்கத்தான் பிறந்தவர்களே தவிர, கண்ணீர் விடப் பிறந்தவர்களே அல்ல, பிரதர்! என்னால் காதலிக்கப்பட்ட ஒருத்தி கண்ணீர் விடுகிறாள் என்பதற்காக அவளை நான் காலம் முழுவதும் காதலித்துக் கொண்டிருக்க முடியுமா? அப்படிக் காதலித்தால் அதற்குக் 'காதல்' என்றா பேர்? இல்லை. 'தண்டனை' என்று பேர் பிரதர், 'தண்டனை' என்று பேர்!"

"படு புத்திசாலிடா, நீ! நீ கைவிடாவிட்டால் அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள்?"

"யோசித்துப் பார், நான் மட்டுமா அவளைக் கைவிடுகிறேன்? அவளை நான் கைவிடும்போது அவளும் அதே சமயத்தில் தன்னையறியாமல் என்னைக் கைவிட்டு விடுகிறாள்!"

"அடி, சக்கை! மனு நீதிச் சோழன்டா, நீ! நீதி சாஸ்திரம் எழுதிய மனுகூட உன்னிடம் பிச்சை வாங்க வேண்டும். அது கிடக்கட்டும், நீ அவளைக் கைவிட்டால் இன்னொருவளைத் தேடிக் கொள்ள முடியும்; அவள் இன்னொருவனைத் தேடிக் கொள்ள முடியுமா?"

"ஏன் முடியாது? நானும் என்னுடைய 'பாலிசி'யும் அப்படியொன்றும் அனாதைகளாக இருக்கவில்லை, மாதவன்! என்னையும் என்னுடைய லட்சியத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/80&oldid=1384747" இலிருந்து மீள்விக்கப்பட்டது