பக்கம்:சுயம்வரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

85


சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள்? அவளுக்குப் பின்னால் வந்த ஆனந்தன் மட்டும் அதை மறுக்காமல் இருந்திருந்தால் என் கதி இந்நேரம் என்ன ஆகியிருக்கும்?

இதுபோன்ற பொய்கள் அவள் என்மேல் கொண்டுள்ள காதலை வளர்க்கவா செய்யும்? - பைத்தியக்காரி!

அவளைப் பொறுத்தவரை இது வேடிக்கையாகச் சொல்லக்கூடியதும் அல்ல; உண்மையாகவே சொல்லக் கூடியது.

அந்தப் 'பைத்தியக்காரி'யிடமிருந்து மதனாவை உடனே விடுதலை செய்ய வேண்டும், அவளை வேறு எங்கே கொண்டு போய் வைப்பது?...

அதுதான் மாதவனுடைய பிரச்சினைகளிலேயே பெரும் பிரச்சினையாயிருந்தது.

மாமாவும் மாமியும் இந்த யுகத்தில் இங்கிருந்து கிளம்ப மாட்டார்கள்.

இவர்களுக்கும் தெரிந்தே அவளைக் கொண்டு வந்து இங்கே வைத்துக் கொள்ளலாமென்றாலும், அதற்கு வேண்டிய துணிவும் எனக்கு ஏனோ வரவே மாட்டேன் என்கிறது. அந்தத் துணிவு இருந்திருந்தால்தான் முதல் நாள் இரவே அவளை நான் இவர்களுக்குத் தெரியாமல் அங்கே கொண்டு போய் ஒளித்து வைத்திருக்க வேண்டாமே!

மதனாவுக்காக மாமாவையும் மாமியையும் கண்டு அஞ்சவில்லை நான். ஆனால் இந்த நீலா? - ஏதும் அறியாத அவள் சுபாவம்; இனம் தெரியாமல் அவள் என்மேல் கொண்டுள்ள அன்பு - இவற்றுக்கு முன்னால் என்னையும் அறியாமலல்லவா அவளுக்கு நான் அஞ்ச வேண்டியிருக்கிறது?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/88&oldid=1384786" இலிருந்து மீள்விக்கப்பட்டது