பக்கம்:சுயம்வரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

87


அம்மாவையும் உடனே பார்த்துப் பேசி, இந்த வருஷமே கலியாணத்தைச் செய்து வைத்து விடலாமென்று நினைக்கிறேன். அதற்காக நாங்கள் இப்போது எங்களுடைய ஊருக்குக்கூடப் போவதாக இல்லை; நேரே அவர்கள் இருக்கும் ஊருக்குத்தான் போகப் போகிறோம்."

இதற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு; "போய் வாருங்கள்" என்றான், 'மங்களம் உண்டாகட்டும்' என்று மட்டும் சொல்லாமல்!

அத்துடன், அங்கே போனால் விஷயம் எப்படியும் வெட்ட வெளிச்சமாகிவிடும்; அதற்குப் பிறகாவது இவர்கள் தன்னை விட்டுத் தொலைக்கலாமல்லவா?...

இப்படி நினைத்த மாதவனுக்கு அதுவும் ஒரு விதத்தில் நல்லதாகவே தோன்றிற்று. தான் கலியாணம் செய்து கொண்ட விஷயத்தைத் தானே இவர்களிடம் சொல்வதை விட, தன்னுடைய பெற்றோர் சொல்லிவிடுவது மேல்தானே?

பாவம், இந்த நீலா! அவள் மனம்தான் அதைக் கேட்டதும் உடைந்து போகும். அதற்காக இன்னும் எத்தனை நாட்கள் அவளுக்குத் தெரியாமல் அந்த விஷயத்தை மறைத்துக் கொண்டிருக்க முடியும்? இன்றில்லா விட்டாலும் என்றாவது ஒரு நாள் அது அவளுக்குத் தெரியவேண்டியது தானே? இப்போதே தெரிந்துவிட்டுப் போகிறது!

அதனால் எனக்கும் ஒருவிதத்தில் நிம்மதி; அவளுக்கும் இன்னொரு விதத்தில் நிம்மதி.

ஒருவேளை அந்த அசட்டுப் பெண் அதையும் கேட்டுவிட்டு, 'அத்தான் அந்தக் கலியாணத்தைக்கூட வேடிக்கைக்காகத்தான் செய்து கொண்டிருப்பார், இல்லேம்மா?" என்று தன் அம்மாவிடம் வழக்கம்போல் கேட்டுவிட்டுக் கைகொட்டிச் சிரிப்பாளோ?...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/90&oldid=1384793" இலிருந்து மீள்விக்கப்பட்டது