பக்கம்:சுயம்வரம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சுயம்வரம்


மாதவன் இப்படியெல்லாம் எண்ணிப் பொருமிக் கொண்டிருந்தபோது, "டிபன் கொண்டு வரட்டுமா, அத்தான்?" என்று அவனை மேலும் சோதிப்பது போல் கேட்டுக்கொண்டே அங்கு வந்தாள் நீலா.

ஆழ்ந்த பெருமூச்சுடன் அவளை ஏறிட்டு நோக்கி விட்டு, "தேவலையே, இன்று உன் அம்மா உன்னைப் பிடித்துத் தள்ளாமலேயே நீயாக வந்து எனக்கு முன்னால் நின்றுவிட்டாயே!" என்றான்.

அதற்குள் அங்கே வந்த அவள் அம்மா, "என்றைக்கும் அப்படியே இருந்துவிடுவாளா? இன்று கொஞ்சம் முன்னேறியிருக்கிறாள்!" என்றாள் புன்னகையுடன்.

"ம், முன்னேறட்டும், முன்னேறட்டும்!" என்று சொல்லிக்கொண்டே, நீலா கொண்டுவந்து வைத்த 'டிப'னில் கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுப் பார்த்தான் அவன்.

"எப்படியிருக்கிறது, அத்தான்?" என்றாள் அவள்.

"உன்னைப்போல் இல்லை" என்றான் அவன்.

"அப்படியென்றால்...?"

"நன்றாயிருக்கிறது என்று அர்த்தம்டி!" என்றாள் அம்மா 'சமய சஞ்சீவி' போல் வந்து குறுக்கிட்டு.

"ஏன், நான் நன்றாயில்லையா?" என்றாள் அவள், முகம் சிவக்க.

"யார் சொன்னது? வேடிக்கைதான்! ஒரு பெண்ணை 'நன்றாயில்லை' என்று அவளிடமே சொல்ல இந்த உலகத்தில் எந்த ஆணுக்கும் தைரியம் கிடையாதே" என்றான் அவன்.

"உங்களையும் சேர்த்துத்தானே சொல்கிறீர்கள்?" என்றாள் மாமி, மீண்டும் தன் மகளுக்குப் பதிலாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/91&oldid=1384800" இலிருந்து மீள்விக்கப்பட்டது