பக்கம்:சுயம்வரம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

89

மாதவன் சிரித்தான்; சிரித்துவிட்டுச் சொன்னான்:

“இப்படி எல்லாவற்றுக்கும் நீங்களே வந்துகொண்டிருக்க முடியுமா, என்ன?”

“அவள் குழந்தை, அவளுக்கு என்ன தெரியும்?”

“நான் குழந்தையில்லையே” என்று அங்கிருந்து நழுவினான் அவன்.


அழகான பெண்களும், ‘அவுட் ஆல் ஏஜ்’களும்...
ஆகா, ஆகா!...


12

னந்தன் சொன்னது சொன்னபடி, கண்ணீரும் கம்பலையுமாகத்தான் அந்தப் பெண்கள் விடுதியின் வாசலிலே நின்றுகொண்டிருந்தாள் மதனா.

மாதவனைக் காதலிக்கும்போதும், அவனுக்காகத் தன் தந்தை, தாயார், உற்றார், உறவினர் ஆகியோரையெல்லாம் ஒரு நொடியில் உதறி எறிந்துவிட்டு, ‘நீயே கதி’ என்று அவனைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டபோதும் அவள் எவ்வளவுக்கெவ்வளவு பெருமையுற்றிருந்தாளோ, அவ்வளவுக்கவ்வளவு இப்போது சிறுமையுற்றிருந்தாள்.

காரணம், முதல் நாள் இரவு அவள் அருணாவின்மேல் வைத்த நம்பிக்கையை மறுநாள் காலை வந்த ஆனந்தன் அடியோடு தகர்த்தெறிந்துவிட்டுச் சென்றிருந்ததுதான்.

‘இதோ, நான் போய் அந்த மாதவனின் காதைப் பிடித்து இழுத்துக்கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுப் போன அருணா, நெடு நேரமாகியும் வராமற் போகவே, அவளை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த மதனா, உள்ளேயே அடைந்து கிடக்க முடியாமல் சற்றுக் காற்றாட வெளியே வந்தாள். வந்த பிறகுதான் ‘ஏன் வந்தோம்?’ என்று ஆகிவிட்டது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/92&oldid=1385151" இலிருந்து மீள்விக்கப்பட்டது