பக்கம்:சுயம்வரம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

91


ஏனெனில், அத்துடன் எல்லாம் முடிந்துவிடுகிறதல்லவா? ஆனால் உனக்கு வரப்போகும் ஆபத்து அப்படிப்பட்டதல்ல; அது உன் வாழ்வைப் பற்றியது மதனா, வாழ்வைப் பற்றியது!"

"அதாவது, அவர் நீலாவைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்; அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்று சொல்லப் போகிறீர்கள்; அவ்வளவுதானே?" என்றாள் அவள்.

ஆனந்தனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை - தான் சொல்லப்போவது உண்மையாயிருந்து, அது அவளுக்குத் தெரிந்திருந்தால்கூட அவனுக்கு ஆச்சரியமாயிருந்திருக்காது; பொய்யும் அவளுக்குத் தெரியுமென்றால் அது அவனுக்கு ஆச்சரியமாயிருக்காதா? - அந்த ஆச்சரியத்துடனேயே அவன் அவளைக் கேட்டான்:

"ஆமாம், அது எப்படித் தெரிந்தது உனக்கு?"

"தெரியட்டும், தெரியாமற் போகட்டும். அதில் அவருக்கு மகிழ்ச்சியென்றால் எனக்கும் மகிழ்ச்சிதான். அப்புறம்?"

இந்த 'அப்புறம்?' என்பதற்கெல்லாம் ஆனந்தனா அசைந்து கொடுப்பான்? அவன் 'ஹஹ்ஹஹ்ஹா' என்று ஒரு 'சினிமாச் சிரிப்பு'ச் சிரித்துவிட்டு, "இது நளாயினி காலம் இல்லை மதனா, 1973" என்றான்.

அதற்கும் விட்டுக் கொடுக்கவில்லை அவள்; "அதுவும் தெரியும் எனக்கு; அப்புறம்?" என்றாள் அதே தோரணையில்.

"அவனை நம்பி நீ உன் காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறாய் என்கிறேன் நான்!" என்றான் அவன், அவள் மேல் குற்றம் சாட்டுவதுபோல் 'வில்லன் போ'ஸில் நின்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/94&oldid=1384807" இலிருந்து மீள்விக்கப்பட்டது