பக்கம்:சுயம்வரம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

93


அதிகரித்துக்கொண்டு வருகின்றன!' என்று நீங்கள் அன்று பேசிக் கொண்டிருக்கவில்லையா? அந்தப் படிக்கு மேலே இன்னும் ஒரே ஒரு படிதான் போகச் சொல்கிறேன் நான். அதாவது, 'ஒருத்தி ஒருவனுடன் கட்டுப்பட்டுத்தான் வாழ வேண்டும் என்பது என்ன நீதி?' என்று கேட்கிறேன் நான். கேவலம், ஆடு மாடுகள் போன்ற நாலு கால் ஜீவன்களுக்குக் கூட இல்லாத அந்தக் கட்டுப்பாடு, இரண்டு கால் ஜீவன்களுக்கு மட்டும் ஏன், எதற்காக? வளமான வாழ்வைப் பறிக்கும் அந்த வறட்டுப் பெருமை உனக்கு வேண்டவே வேண்டாம். அதனால் பரம்பரை, குல முறை வேண்டுமானால் உருவாகலாம்; சர்வ வல்லமையுள்ள பணம் உருவாகுமா, பணம்? ஒரு பெண் அந்தக் கட்டுப்பாட்டை மட்டும் காலத்தோடு உதறி எறிந்து விட்டு என்னுடன் வரட்டும்; அவள் காலடியில் அவளுடைய எடைக்கு எடை தங்கத்தைக் குவிக்கிறேனா, இல்லையா என்று பார்!

ஆனால் பெண்ணைப் பொன்னாக்கும் வித்தை எல்லாருக்கும் தெரிந்துவிடாது மதனா, எல்லாருக்கும் தெரிந்து விடாது. அது என்னைப் போன்ற ஒரு சிலருக்கே கைவந்த கலை. ஆம், 'அபத்தம்' எதுவாயிருந்தாலும் அதைக் 'கலை' என்று அழகுத் தமிழில் சொல்லிவிடு; எல்லாம் மறைந்து போகும். அதற்குப் பின் பார்! வழுக்கை விழுந்த எத்தனையோ பெரிய தலைகள் வந்து உனக்கு 'வைராபிஷேகம்' செய்யும்; உன் காலடித் தூசை வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொள் வதற்காகக் கையேந்தி நிற்கும். அத்தகைய வாழ்க்கைக்கு வழி காட்டத் துடிக்கும் என்னை நீ எங்கே நம்புகிறாய்? அருணாவை நம்பும் அளவுக்குக்கூட நம்பவில்லையே! அவளையும் நான் இப்போது வழியில் பார்த்துவிட்டுத்தான் வருகிறேன். அவள் உன்னிடம் சொல்லிவிட்டுச் சென்றது போல அந்த மாதவனை இங்கே அழைத்துக்கொண்டா வரப் போகிறாள்? ஒரு நாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/96&oldid=1384813" இலிருந்து மீள்விக்கப்பட்டது