இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
106
சுரதா கவிதைகள்
புகழ்வெறி எனக்குப் புள்ளி யளவும்
இல்லை! சராசரிப் பொறாமையும் இல்லை!
நானொரு கவிஞன்! அதைவிட
நானொரு நல்லவன் இந்த நாட்டிலே!
✽✽✽
எண்ணங்கள் தருபவனே சிறந்தோன்; கோழை
எனப்படுவோன் நூறுமுறை இறந்தோன்; வாழ்வில்
கண்எனக்கு எதுவென்றால், தமிழ்தான்! நல்ல
கவிதைகளே என்மூச்சு............
அறிந்தேன்
பணப்பெருமை மீன்கிழிக்கும்
நீர்க்கோடென் றறிந்தேன்
பாரினிலே புகழொன்றே
நிலைத்திடுமென் றறிந்தேன்
–இதழ் : சுரதா (1–3–1968)
வென்றவரும் சிலசமயம் தோற்பரென்பதறிந்தேன்;
வெறும்பேச்சில் யாதொன்றும் விளையாதென் றறிந்தேன்;
பொன்னெல்லாம் மண்வயிற்றின் கருவென்ப தறிந்தேன்;
புகழெல்லாம் அறிவினலங் காரமென்ப தறிந்தேன்.
–நூல் : துறைமுகம்