உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

1


இயற்கை

கோடைவெயில் வந்ததனால் குயில்கள் கூவும்
         கொம்பெங்கும் தளிர்தொங்கும் வண்ணம் மேவும்
ஏடுதரும் பைத்தமிழைக் கிளிகள் கற்கும்.
         இலைக்குடையைப் பிடித்தபடி மரங்கள் நிற்கும்.


ஆறெல்லாம் போர்த்துவது பூவின் போர்வை;
அழகுமலர் வழிப்பதெல்லாம் செந்தேன் வேர்வை;
சேறெல்லாம் பயிருண்ணும் கறுப்புச் சோறு.
–இதழ் : சுரதா (1–6–1968)

இறைவன்

ஆதியில் வாழ்ந்தோர்க் கெல்லாம்
         அச்சமே இறைவ னானான்.
ஓதிய மேலோர்க் கெல்லாம்
         உண்மையே இறைவ னானான்.
பாதியில், நாட்டை யாண்ட
         பார்த்திபன் இறைவ னானான்.
மேதினி மீதில் இந்தோ
         விஞ்ஞானி இறைவ னானான்.
–நூல் : துறைமுகம்