பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதாகவிதைகள் 21


        நிலத்திற் கழகு நெல்லாம் கரும்பாம் 
        தடாகத்திற் கழகு தாமரைப் பூவாம் 
        நெஞ்சத்திற் கழகு நல்ல நினைவுகள்
        மஞ்சத்திற் கழகு மாதே நீதான்.
                           - நூல்: தேன்.மழை
        வன்பால் குறிஞ்சிநிலம் -அது 
        வாழ்க்கைப் புணர்ச்சி நிலம்! 
        மென்பால் மருதநிலம் - அதை 
        வெல்வதுன் மேனி நலம்!
                       -இதழ்: சுரதா (1.5-1968)
        பிறைநிலவின் மொழி பெயர்ப்பே யானைத் தந்தம்;
          பெற்றோரின் மொழிபெயர்ப்பே குழந்தை யாகும்; 
        வறுமையதன் மொழிபெயர்ப்பே ஏழை மக்கள்: 
          வானத்தின் மொழிபெயர்ப்பே பெண்ணின் பார்வை  
                                            - நூல்:துறைமுகம்.


         பருவம் என்பது காலத்தின் பக்குவம்
         பெண்ணுக் கமைந்திடும் பேதைப் பருவமோ, 
         நிமிர்ந்து வளரும் நெற்பயிர் போன்றது. 
         மனமாலைக் குரிய மங்கைப் பருவமோ, 
         நிதானமாய்க் குனியும் நெற்கதிர் போன்றது.
                                   - நூல்: கவரும் சுண்ணாம்பும்