உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரதா கவிதைகள்

47



படிப்பதும் கலைதான்; செய்யுள்
        படைப்பதும் கலைதான்; பூவைத்
தொடுப்பதும் கலைதான்; பெண்ணைத்
        தொடுவதும் கலைதான்.........


விற்பனை அதிக ரித்தால்
        விளைபொருள் அதிகம் தோன்றும்
கற்பனை அதிக ரித்தால்
        கலைபல நாட்டில் தோன்றும்


நினைவில் அழகும்; அழகில் போதையும்
போதை ஏற்படின் புதுப்புது ஆசையும்
ஆசையால் உறவும் அதனால் கலப்பும்
உயிரின் பிரசவம் உற்பத்தி யாகும்.
கலப்பால், குடும்பக் கலையும் வளரும்.

—‘குடும்பக்கலை’ ஆண்டுமலர்

மத்தளம் சத்தம் செய்ய,
        மகரயாழ் ஏங்க, வண்ணச்
சித்திரா பதியாள் பெற்ற
        தேன்மகள் அரங்கந் தன்னில்
தத்தித்தா தைதை என்றே
        சதிராடி னாளே அந்த
முத்திரை நடன மெல்லாம்
        முழுமுதற் கலைதா னன்றோ?