இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுரதா கவிதைகள்
51
கவியரங்கம்
கற்போர்க்குக் கவியரங்கம் செந்தேன் கேணி
கல்லார்க்கே கவியரங்கம் குத்தும் ஆணி.
உவமை
கவிதையில் கருத்து வேண்டும்.
கட்டாயம் உவமை வேண்டும்.
உவமைதான் கவிதை கட்கு
உயிர்நாடி; பெருமை சேர்க்கும்
✽✽✽
உவமையில் லாத பாடல்
உப்புசே ராத பண்டம்!
அவிழ்ந்திடா தாம ரைப்பூ!
அழகுஇல் லாத மங்கை!
✽✽✽
ஒப்பிட்டுச் சொல்வதற்கு திறமை வேண்டும்.
உழைத்தோர்க்கே அத்திறமை வந்து வாய்க்கும்.
உப்பற்ற உணவுக்கும் தாய்ப்பால் போன்ற
உவமையில்லாப் பாடலுக்கும் பெருமை இல்லை.
–இதழ் : ‘தமிழ்நாடு’ (14–1–1965)