இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
சுரதா கவிதைகள்
வாழ்வில்முன் னேற்றம் உழைக்காமல் வராது தோழா – தானாய்
உப்புக்கடல் முத்து எப்படிக் கரையேறும் தோழி.
–நூல் : தொடாத வாலிபம்
இழைத்தால்தான் நூல்கிடைக்கும் என்பதாலே
இழைக்கின்றோம் பஞ்சுதனை; எந்த நாடும்
உழைத்தால்தான் முன்னேற முடியு மன்றி
உபதேசச் தால்தேசம் உயர்வ தில்லை.
–நூல் : துறைமுகம்
இழைப்பினால் பஞ்சும்; கற்றோர்
எழுத்தினால் பாட்டும்; தீயின்
விழிப்பினால் அடுப்பும்; மீட்டும்
வீணையால் இசையும்; மண்ணின்
செழிப்பினால் நெல்லும் புல்லும்
சிறந்திடும் தன்மை போல,
உழைப்பினால் உயரக் கூடும்.
உயர்ந்தோரை உலகம் நாடும்.
–இதழ் : சுரதா (15–5–1969)
வியர்வை
வியப்போ! புதிய உணர்ச்சியின் விளக்கம்!
வியர்வையோ! உடல்தரும் உப்புநீர் விளம்பரம்!