பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சுழலில் மிதக்கும் தீபங்கள்


பதின்மூன்று வயசுப் பெண்ணின் யதார்த்தமான சிந்தனை, அவளுள் நெகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.

‘அவளக்கடத்திட்டுப் போயி என்ன பண்ணுவாங்க! இவளே தானே ஒடியிருக்கா. கொஞ்ச நாளாவே போக்கு சரியில்லாமதானிருந்தது. ஆனா இவ்வளவுக்குத் துணிஞ்சுடுவன்னு நான் நினைக்கல...ஏண்டி நிக்கற எம்முன்னால? எந்த எண்ணத்தோட நீ போனியோ, அதே கையோட திரும்பிப் போய்க்கோ. நீ இந்த ஒரு வாரமா எங்கே இருந்தே, எங்கே போனேன்னு நான் 'ப்ரோப்' பண்ண போறதில்ல. நீ ஒரு வேளை வராமலே இருந்தா தேடிட்டிருப்பேன். இனிமே விசாரிக்கிறதே அசிங்கம். எனக்கு மானக்கேடாயிட்டுது. போலீஸ் கமிஷனர்கிட்ட நான் எந்த முகத்தை வச்சிட்டு என் பெண்சாதி வந்துட்டான்னு சொல்லுவேன்? என் மானம் கப்பலேறியாச்சு!’

ஒரு பேய்க் கையால் முகத்தில் அறைப்பட்டாற் போல் இருக்கிறது.

எத்தனை இயந்திர மயமான இராட்சதத் தாக்குதல்? எரிவாயு அடைப்பானை மூட மறந்து போய், காலையில் தீக்குச்சி, கிழிக்குமுன், அது ஆளை அடிக்கப் பற்றிக் கொள்வது போன்ற கதைதானா இது? அப்படி இப்படி மறந்து போய் மின் இணைப்பைத் தொட்டு விடுவது போன்றது தானோ, இவள் குடும்ப அரண்களும்? இவன் ஏன் இவ்விதம் நடந்து கொள்ள நேர்ந்தது என்று நினைக்கும் அளவுக்குக் கூட அவள் ‘மனித’ மதிப்பைப் பெற்றிருக்கவில்லையா? குடும்ப மானம் என்பது அவள் தாங்கிக் கொண்டிருக்கும் நீர்க்குமிழியா?

“என்னடீ மனிதத்தன்மையைக் கண்டுவிட்டாய், பெரிய...மனிதத்தன்மை? நானும் ஊரில இல்லாதபோது, அம்மாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டுப்போகற அளவுக்குக் கிரிசை கெட்ட உனக்கு நான் என்னடி மனிதத் தன்மையைக் காட்டனுங்கறே?’