பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘ஓ..நா... நான் ரத்னாவின் ஆண்டி’, கிரிஜா பேசுகிறேன். ரத்னா இல்லையா?’

‘...அவ...எம். பி. ரோட் ஹாஸ்டலுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளே? உங்க வீட்டுப்பக்கம்தான்.’

‘..எனக்கு அவசரமா. அவ ஹெல்ப் வேண்டியிருக்கு சந்திச்சுப் பேசணும். கொஞ்சம் வழி சொல்கிறீர்களா? பஸ் எந்த பஸ்னு சொன்னாத் தேவலை...’

‘ஷூர்...உங்கபக்கத்திலேந்து ட்ரிபிள் ஃபோர்...நாலு நாலு நாலு பஸ் போகும்-விமன் ஹாஸ்டல் ஸ்டாப்பிங்கே இருக்கு...நீங்க வீட்டிலேந்துதானே பேசுகிறீக?...

‘இல்ல’ பப்ளிக் பூத். உங்க கொஸ்ச்சினருக்கு நாலஞ்சு நாளுக்குள்ள விரிவா பதில் எழுதித் தரேன் ...நீங்க...முடிஞ்சா. ரத்னாவுக்கு ஃபோன் பண்ணி நான் வரேன்னு சொல்லுறீங்களா?...இங்க... கனெக்ஷன் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல...’

சொல்றேன். நீங்க வேற ஏதானும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கம்மா!’

‘சொல்றேன்...பின்னால. தாங்க்ஸ்...’

வாங்கியை வைத்து விட்டுச் சிறிது தொலைவு நடந்து சென்று, பஸ் நிறுத்தத்தில் நிற்கிறாள். கையில் அதிகப் பணம் இல்லை. அன்று ஐநூறு ரூபாய் மட்டுமே கைப்பையில் எடுத்துக் கொண்டிருந்தாள். இனி, ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவழிக்க வேண்டும். ஆட்டோவுக்குச் செலவு செய்யக் கூட கணக்குப் பார்ப்பவளாக, பழைய கிரிஜாவாக எண்ணிக் கொள்கிறாள்.

பஸ்ஸிலேறி பெண்கள் விடுதி நிறுத்தத்தில் வந்து இறங்குகிறாள்.

உயர்ந்த சிவப்புக் கட்டிடம். மூன்றடுக்குகள் இருக்கின்றன. நான்காவது மாடிக் கட்டிட வேலை நடக்கிறது.