பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

சுழலில் மிதக்கும் தீபங்கள்


ஆனி சென்ற பிறகு சில நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு நடந்த நிகழ்ச்சிக்களை மறக்க முயலுகிறாள்.

ஒருபெண், எத்தனை வயதானாலும், என்ன நிலையானாலும், வீட்டரணை விட்டால், தறிகெட்டுப் பாலுணர்வின் உந்ததுலினால் தன்னை மாசுபடுத்திக்கொண்டு விடுவாள் என்ற தீர்மானமான, அருவருக்கத்தக்க கருத்தைக் கல்லாய் நிலைப்படுத்தியிருக்கிறார்கள். எந்த வயசானாலும், கணவன் தவிர்த்து ஒரு பெண் எந்த ஆண்மகனுடனும் பேசவோ, பழகவோ, ஒன்றாக நடக்கவோ நேர்ந்தால், அந்த ஒரே கோணப்பார்வைதான் பதிக்கப்படுகிறது. இந்தப் பார்வை ஆணைக் கட்டுப்படுத்தாது.

இத்தனை ஆண்டுகள் படித்து, பெண் பொருளாதார சுதந்திரம் பெற்றபின் உள்ள நிலையா இது? எந்த உண்மை யும் ஒரு சோதனைக் கட்டத்தில்தான் குதித்து வெளி வருகிறது. சாமு அவள்மீது வைத்திருக்கும் மதிப்பை வெளியாக்கி விட்டான். இனி அந்தக் குடும்பத்துடன் அவளால் எவ்வாறு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியும்?

ஆனால்...கவிதா, சாரு...

நெடுநேரம் கூரையை வெறித்துக் கொண்டு அவள் கிடக்கிறாள். பையன் அவளுடைய பிரேக்ஃபாஸ்ட் உணவைக் கொண்டுவந்து கதவைத் தட்டும் போதுதான் புதிய கரையில் ஒதுங்கியிருக்கிறோம் என்று நினைவு வருகிறது. எழுந்து கதவைத் திறக்கிறாள், டோஸ்ட், ஜாம் வெந்தமுட்டை, சூட்டுக் குப்பியில் காபி முதலியவை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். முட்டை வேண்டாம் எடுத்துச் செல் என்று கூறுகிறாள். ஆனால் அவனுக்கு அது புரிய வில்லையோ என்னவோ?...தட்டை எடுத்துச்செல் என்று சொல்வதுபோல், ‘இருக்கட்டும் பின்னால் வருகிறேன்’ என்று போகிறான்.

குளியலறையில் சென்று புத்துணர்வு பெற்று வந்து சேலைமாற்றிக் கொள்கிறாள். இந்த அறையில் ஈரச்சேலை