பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

சுழலில் மிதக்கும் தீபங்கள்

கப்பட்ட கட்டுரை, கவிதைகளின் தொகுப்பு. ‘விமன்ஸ் பிரஸ்’ வெளியிட்டது.

எடுத்துப் பிரித்துத் தலைப்புகளைப் பார்க்கிறாள்-

பெண்-தாய்மை-பெண்-சமயம்-

கருச்சிதைவு-பாலுணர்வுச் சிக்கல்கள்-போர்னோகிராஃபி ...இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகளே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன நூலில்.

பெண்ணுரிமைக் கோணத்தில் இப்பிரச்னைகள் சமூகத்தில் எவ்வாறு ஆழ்ந்து போய் அவளைப் பாதிக்கிறதென்று ஆசிரியை பல நிரூபணங்களுடன் விவாதிக்கிறாள் என்பவை மாதிரிக்கு அங்கும் இங்குமாகப் பார்த்துப் புரிந்து கொள்கிறாள்.

அமெரிக்காவில், கருச்சிதைவுக்கு அங்கீகாரமில்லை என்ற நிலையில், கட்டுப்பாடற்ற வாழ்வில் பாதிக்கப்பெற்று சுமக்கும் பெண்ணொருத்தி தன் சுமையைக் கழிக்க அனுபவிக்கும் கொடுமைகளை விளக்கிக் கொண்டு போகிறாள்.

தொடர்ந்து படிக்க முடியவில்லை.

நெஞ்சு இறுகிப் போகிறது.

நாகரிக நாட்டிலே, நாகரிக உலகிலே, பெண் இந்த நிலையிலும் வெறும் தோலும் சதையுமாகவே. சீரழிக்கப் படுகிறாள் என்ற விவரங்களை சீரணிக்க முடியவில்லை.

ஊடே, இந்த நாட்டிலும் இந்தப் பெருநகரிலும், நமக்குத் தெரியாத எத்தனை கோரங்கள் நாகரிக அலங்காரப் பூச்சுக்கும் சுதந்தரத்துக்கும் அப்பால் ஒவ்வொரு பெண்ணையும் ஆட்டி அலைக்கழிக்குமோ என்ற அச்சம் குளிர்திரியாக ஓடுகிறது. அறையில் கடியாரமில்லை. இவள் கைக்கடியாரம் நின்று போயிருக்கிறது. இது மிகப் பழைய கடிகாரம், இவள் திருமணத்துக்கு ருக்மணி டீச்சரும் பாகீரதி டிச்சரும் பகிர்ந்து கொண்டு வாங்கிப் பரிசளித்த ‘ஸூஜா தா கடியாரம்.