பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

113


விருந்தினராக அழைத்து வரலாம்...அங்கு, சுருள் சுருளாகப் புகைவிடும் வனிதையர் புதிதில்லை. உடையணிவதிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனி, பத்து நாட்களாக இவளுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு வெளியே எங்கோ உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாளாம்.

இரண்டாம் மாடி ஏறிப்போகுமுன் முட்டி வலிக்கிறது. இலேசாக மூச்சு இறைக்கிறது. எதிரே புரளும் நீண்ட விட்டங்கியில், அழிந்த சாயமும் கிறங்கிய கண்களுமாக ருனோ இறங்கிப் போகிறாள். ஆல்கஹால் வாசனை நாசியில் படுகிறது.

இங்கு எல்லாம் சர்வ சகஜம்...

கதவுச்சாவி இருக்கிறது. திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள்...

கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள்.

எப்போதும் அணியும் பொன்வடமில்லை. சிறுசிறு சிவப்பு மணிகளாலான மெல்லிய சரம், அழகாகத்தானிருக்கிறது.

இரண்டு மூக்குத்துவாரங்கள். ‘விடுதலை’ என்றறிவிக்கிறது. செவிகளில் சிறுதிருகாணி மட்டும் போட்டிருக்கிறாள்.

கைப்பையைத் திறந்து, கற்றை நோட்டுக்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆயிரத்தைந்நூறு...வங்கி...ரசீது...

தனக்குத் திருநீர்மலைக்கோயிலில், சாமு அந்தச் சங்கிலியைப் போட்ட நேரம் நினைவில் வருகிறது. அது ஒன்றுதான் அவளே சம்பாதித்துச் சேர்த்துச் செய்து கொண்ட பொன்னகை. கல்யாணத்துக்கென்று அவள் பணத்தில்தான் தாலிக்கொடி பண்ணக் கொடுத்தார்கள். அதன்மீது எத்தனை புனிதம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது! பொற்சங்கிலி, தனியாக மஞ்சட்சரட்டுத்தாலி என்று இரண்டு போட்டுக் கொண்டிருந்தாள் வெகுநாட்களுக்கு. பரத் பிறந்த பிறகு வெறும் தங்கக் கயிற்றுத்தாலி மட்டும் போட்டுக்கொள்வதென்றுவிடுத்தாள்.