பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

119

கவனிக்கிறவர் யாருமில்ல. வீட்டிலே வேற ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு வச்சிட்டான். இது பாய்ஃப்ரண்ட் அது இதுன்னு கெட்ட பழக்கங்களுக்கெல்லாம் அடிமையாயிட்டது. இப்ப பாரு, பாய்ஃப்ரண்ட் வந்தானாம். அவங்க கூடப் பேசிட்டு வெளியே நின்னாளாம். எல்லாரும் பார்த்தேங்கறாங்க...”

“நான்கூடப் பார்த்தேன் ரத்னா...வேகமாகப் படியிறங்கிப் போனாள்...”

“ரொம்பக் கஷ்டமா இருக்கு...பை த பை வாசலில் கார் நின்னுது. உன் ஹப்பி இருந்தான். மாமியார் மேல வந்தாளா?

“ஆமாம். எல்லாம் குடுத்துட்டா...”

“ஒ. கே. நான் வரேன்...நீங்க போயி ரெஸ்ட் எடுத்துக்குங்க!” ரத்னா விரைகிறாள்.

உடலை எடுத்துக் கொண்டு சென்ற பின்னரும் பெண்கள் ஆங்காங்கு நின்று அவளைப் பற்றியே பேசுகிறார்கள்...


16

கிரிஜாவுக்கு ஆணி அடித்தாற்போல் ஒரே வரிதான் ஆழ்ந்து பதிகிறது.

அம்மா இல்லை. அப்பா குடிகாரன். வீட்டில் யாரோ ஒரு பெண் பிள்ளையைக் கொண்டுவந்து விட்டான்...

கவிதா...கவிதா... வயசு வந்த பெண்...கட்டுப்பட்டே பழக்கப் படுத்தியிராத பெண்...

இப்போது கட்டுப்படுத்துவார்கள். அவளைக் காப்பி போடச் சொல்வார்கள். ‘மடிப்’ பழக்கம் கட்டுப்பாடாக்கப் படும். பள்ளிக்குச் சென்று வருதல் கண்காணிக்கப் பெறும்.