பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

11


“கிரி.. புடவை கொண்டு வரியாம்மா...?”

“இதோ வந்துட்டேம்மா!”

கைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.

பரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.

கடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.

சேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக் கின்றன.

“குழந்தை ஸ்கூலுக்குப் போயிட்டானா?”

“ம்...”

“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா?”

“ம்”

“விளக்கேத்தி வச்சுட்டுப் போ. இன்னிக்குக் கிருத்திகை யாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை...”


2

வேலைக்காரி மணி அடிக்கிறாள். எல்லா வீடுகளிலும் பாத்திரம் துலக்கும் தொட்டி, சமையலறையில் தான் இருக்கும். இந்த வீட்டிலும் சமையலறையில் இருந்தாலும்,