பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

சுழலில் மிதக்கும் தீபங்கள்

கண்ணாடியினுாடே தெரியும் கலைப்பொருள்களும், இவளுக்கே அந்நியமாகத் தெரிகின்றன.

சுவரில் தொங்கிய ஒரு ‘பதிக்’ ஒவியத்தை அவன் சுட்டுகிறான்.

“இது...எங்க வாங்கினிங்க?”

“நாங்க வாங்கல. ஒரு ஃபாரின் சிநேகிதர் ‘பிரசண்ட்’ பண்ணினதா நினைப்பு.”

“...இது பாலி ஆர்ட்னு நினைக்கிறேன்...”

“ஒ...! நான் இதெல்லாம் கவனிக்கிறதே இல்ல...”

“அட்லீஸ்ட், இது இராமாயணக் காட்சின்னாலும் தெரிகிறதில்ல?”

“அதுதான் அநுமார் முகம் பளிச்சினு இருக்கே?” என்று ரத்னா சிரிக்கிறாள்.

“அது அநுமார்தானா..?” கிரி உற்றுப் பார்க்கிறாள். என்ன மடத்தனம்? அப்படிக்கூட இவள் கவனித்துப் பார்த்திருக்கவில்லை. அநுமாரில்லை என்றால்...?

“உங்களுக்குப் புரியல? இது சுக்ரீவன், இராமர், லட்சுமனர்...பின்னே மரங்கள் சுக்ரீவனிடம் ராமர் தன் வில் திறமையை காட்டும் இடமாக இருக்கலாம்.”

கிரிஜா உற்றுப் பார்க்கிறாள், மீண்டும்.

இராமன் அம்பை எடுத்துப் பூட்டச் சித்தமாக இருக்கும் ‘பாவம்’ தெரிகிறது. மரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டும் இடமோ?

“நான் இத்தனை நாள்-அதாவது அது வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் இருக்கும். இப்போதுதான் நீங்கள் சொன்ன பிறகு உற்றுப் பார்க்கிறேன்...” அவளுக்கு நாணமாக இருக்கிறது.