பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

41


வில்லை. ஒரு சமூக விஷயம் பற்றித் தெரியாது. வாழ்க்கையின் ஒரு பொது ஓட்டத்திலிருந்து ஒதுங்கிய ஒரு அன்றாட நியமத்தில் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்கள். இது முழுதும் தேவைதானா, என்பதை நீங்கள் ஏன் நினைத்தும் பார்க்கவில்லை? பெரிய பெண்சக்தி இப்படி வீட்டுக்குள் முடங்கி வீணாகப் போவதைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்தச் சமுதாயத்தின் குறைபாடுகள், துன்பங்கள், இதெல்லாவற்றிலும் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று ஏன் எப்போதுமே நீங்கள் உணரவில்லை?”

அவன் சற்றே ஆறுதலாகக் காபியை எடுத்துப் பருகுகிறான்.

“ரத்னா சொன்னது போல் மிகவும் நன்றாக இருக்கிறது...” புன்னகை செய்கிறான்.

“...என்னை மன்னித்து விடுங்கள்...குழப்பி விட்டு விட்டேனா?”

'ஒ...நோ. இல்லை. இந்த அதிருப்தி என்னுள் ஆழப் புதைந்துதான் இருக்கிறது. ஆனால்...ஆனால்...பொருளாதாரத் தேவை இருந்தால்தான் பெண் வேலைக்குப் போகலாம் என்ற நினைப்புதான் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர்களிடையே இருக்கிறது. அது ஒரு உரிமை என்றோ, இல்லையேல், அறிவு பூர்வமான மலர்ச்சியும், ஆளுமையும் அவசியம் என்றோ யாரும் நினைப்பதில்லை. சின்னச் சின்ன வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடாய் முடிந்து போக வேண்டி இருக்கிறது.”

“ஆல் ரைட்...நான் ஒரு...சின்ன ‘கொஸ்சினரை’க் கொடுக்கிறேன். அதைக் கொஞ்சம் படித்து. உங்களுக்கு ஆறுதலான நேரத்தில் பதில் எழுதிக் கொடுப்பீர்களா? இது வெறும் சடங்கல்ல. எதானும் உருப்படியாக ‘மோடிவேட்’ பண்ணனும்னுதான் ஆசை...”

தன் பையிலிருந்து நீண்ட டைப் செய்யப்பட்ட காகிதம் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்கிறான்.