பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

கணவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்றால், கிரிக்கு அவன் அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்யும் வேலை கூடுதலாகும்!

அவனே ஒருதரம் சொன்னான். ஏதோ ஒரு செமினாருக்கு மிஸஸ் மேனன் சென்றிருந்தாளாம். “ஒரு சேலை இஸ்திரி போட நம்ம ஊர் கணக்குக்கு நாற்பது ரூபாய் ஆகிறது. சாம், நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்” என்று கேட்டாளாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை, இங்கே நான் ஒண்ணுமே பண்ண வேண்டாம். பத்து நாட்கள் தானே. ஊரில் கொண்டுபோய் போட்டால் என் மிஸஸ், எல்லாம் சரியாக்கி வார்ட்ரோபில் வைத்து விடுவாள்” என்றாராம். மூன்று, மாசம் போல் சென்றிருந்தபோது என்ன செய்தார் என்று அவனும் சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை.

அவன் உடைகளைப் பெட்டி போடக் கொடுத்து வந்து, அவற்றை அலமாரியில் வைக்கையில், அலமாரியை ஒழுங்காக வைக்க, எல்லாவற்றையும் எடுக்கிறாள். மேல் தட்டில் ஒரு புதிய அலங்கார வேலைப்பாடமைந்த பெட்டி இவள் கண்களில் படுகிறது. பவள வண்ணத்தில் பச்சை எனாமல் பூ வேலை செய்யப் பெற்ற அலங்காரப் பெட்டி. ஒரு சிறிய ப்ரீஃப்கேஸ் போல் இருக்கிறது.

“ஏது...? இதுபோல் ஒரு பெட்டி முன்பு கிடையாதே?... வாங்கி வந்திருக்கிறாரா? சொல்ல மறந்து போனாரா?’

பெட்டியை எடுக்கிறாள். மரப் பெட்டி போல் கனமாக இருக்கிறது.

பூட்டு சாவித் துவாரம் கூட வேலைப்பாடமைந்த வில்லையால் மூடப் பெற்றிருக்கிறது. ஆனால் சாவியில்லை; திறக்கவும் முடியவில்லை.