பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சுழலில் மிதக்கும் தீபங்கள்


இதுவரையிலும் அவளுக்குத் தெரியாத இரகசியம் எதுவும் அவனிடம் இல்லை என்று நம்பி இருக்கிறாள். இது... இது என்னவாக இருக்கும்?

பிறகு வேலை ஒடவில்லை. பெட்டி, புழுவாகக் குடைகிறது.

அதில் ‘ஃபான்ஸியாக’ அழகுப் பொருள் ஏதேனும் இருக்குமோ? ஊரிலிருந்து வந்தபோது அவள் தானே பெட்டியைக் காலி செய்து துணிகளை எடுத்து ஒழுங்கு செய்தாள்?

ரத்னா அன்று காலையிலேயே விடுதிக்குச் செல்வதாகக் கூறிப் போய் விட்டாள். ஆனால் பிறகு வருவாள். இவள் வினாத்தாளைப் பூர்த்தி செய்து வாங்கிப் போக, சாமுவிடம் பேச வருவாள். அபுவைக் கூட்டி வந்தாலும் வருவாள். அபு கிறிஸ்தவனா? ஏப்ரஹாமா? இல்லை...அபுபக்கர்.. ஆபத் சகாயம்...எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்-வித்தியாசமானவன்.

பெரியவள் கற்பகத்தின் தாறுமாறான வாழ்க்கைக் குழப்பம் நெஞ்சின் நினைவுகளை முட்டுகிறது. சீராக இருக்கும் குடும்ப அமைதி... இது அமைதியா? உண்மையில் கிரி, நீ மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறாயா?... ஆனால், சாமு தாயாருக்காக இவளை அடிமையாக வைத்திருந்தாலும், வேறு விதமான கெட்ட பழக்கங்களோ, நடத்தைப் பிசகானவனோ அல்ல அவர்களுள் எந்த விதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை-இல்லை. இருந்திருக்கவில்லை. ஆனால் எப்போதும் அவள் தானன்றோ விட்டுக் கொடுக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சுகமில்லை என்றாலும் கூட, அவள் வேலையை அவன் வந்து செய்ய வந்திருக்கிறானோ? அந்த நாளிலும் அவன் அரச அதிகார நிலை மாறியிருக்கிறதோ? 'டாக்டரிடம் போனாயா?’ என்று கேட்க மறந்து போவான். இவளே டாக்டரிடம் ஒட வேண்டும். மருந்து வாங்கி வந்து சாப்பிட்டு உடலைக் காத்துக்கொண்டு உழைக்க வேண்டும். ஆனால்...அவனுக்கு ஒரு தலைவலி வந்தால்கூட, தாங்க மாட்டான். வீடு இரண்டு படும்!