பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

53


கிரிஜாவுக்குப் பய உணர்வும் இல்லை; ஏமாற்றி விட்ட தான எண்ணமும் இல்லை.

முற்றிய நெற்றியில் துளி நீர் பட்டு வெடித்தாற்போல் அவள் அப்போதைக்கு ஒர் ஆசுவாசம் தேடி, அந்தக் கூட்டை விட்டு வந்திருக்கிறாள். இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.

டேராடுன்- ருஷி கேசம்- ஹரித்துவாரம்- ரூர்க்கி மீரட்...

இரண்டாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் காரில் ஹரித்துவாரம், ருஷிகேசம் முதலிய இடங்களுக்கும் பின்னர் காசி, கயை என்றும் சென்றிருந்தார்கள்.

எங்கே போனால் என்ன? மாமியாருக்காக இவள் அடுப்புத் தூக்க வேண்டும். புண்ணியப் பயணம். விடுதலை உணர்வுடன் எதையும் அநுபவிக்க இயலாத மாறுதல்.

அவள் பள்ளியில் வேலை செய்யச் சேர்ந்த முதல் வருஷத்தில், பள்ளித் தலைமை ஆசிரியரான முதியவர், ஒரு வட இந்திய யாத்திரைக்கு அந்த வருஷக் கோடை விடுமுறையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆறு ஆண்களும், பதினெட்டுப் பெண்களும் சேர்ந்த அந்தக் குழுவில், கிரிஜாவைப்போல் ஐந்து பேர் மணமாகாதவர்கள்.

மற்றவர்கள் கணவன் மனைவியர். நடுத்தர வயதினரும், நடுத்தர வயசைக் கடந்தவர்களும் இருந்தார்கள்.

கிரிஜா, தானும் போகிறேன். ஆயிரத்தைந்நூறு செலவாகிறது என்று கூறியபோது அண்ணன் வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டான்.

“ஆயிரத்தைந்நூறுக்கு ரெண்டு மூணு சவரனாலும் வாங்கலாமே. நாளைக்குக் கல்யாணமானால், போகாமலா இருக்கப் போறே இப்ப எதுக்குடி, அண்ணா சொல்றதும் சரிதானே” என்று அம்மாவும் அவனுக்கு ஒத்துப் பாடினாள்!சு-4