பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இரண்டாவது பாகம்

ரித்துவாரம் சென்றடையும்முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.

பழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்றுகூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு, என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப்போக்கு வந்து, ஒரு பெண்னையும் பறிகொடுத்தாளாம்.

கிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும். ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணுறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்... சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.

‘இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்...சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி ...ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா?...

கிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கிவிட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச்