பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

59


சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருந்கிறார்.

சாமு....அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமாக் கிழவரின் யுகம் அது வேறு: இது வேறு.

அந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது. இது பணத்திமிர்-பணச் செருக்கு. ஆடம்பரம்...

விறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பதுபோல் பாதுகாக்கிறாள். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப்பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதிரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.

புருஷனாகப் பட்டவன், துாலமாகவும் சூக்குமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கல்ம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்துவதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்துமில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால்கூட இவர்களுக்குச் சொந்தமில்லை: அவள் தன்னைக் கட்டியவனுககு அடிமையாவாள்.

ஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்திமயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்ஷாவைப் பேசுகிறாள்.

‘நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே? எங்ககூட இருந்துக்கோயேன்? எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே?...’