பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

71


திடீரென்று குளிர் சிலிர்ப்பாக ஒருணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. ரோஜாமாமி அவளைப் பார்த்திருப்பாளோ? இங்கே சந்தித்துக் குற்றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க விடுவிடு வென்று அவள் வெளியேறுகிறாள். கெளரியம்மாளையும் கணவரையும் நினைத்தால்கூடப் பிரச்னை கிளம்பிவிடுமோ என்று தோன்றுகிறது. நிச்சயமாகப் பழமை வாதியான அந்த அம்மாள், இவள் வீட்டைவிட்டு வந்திருப்பதை ஆமோதித்திருக்கமாட்டாள். இவள்மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சரிந்துவிழக்கூடிய சந்தர்ப்பம் நேரிடும். இவள் காது மூக்கில் இல்லாமல், வெறும் சங்கிலிக் கொடியுடன் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். கல்யாணமாயிருக்கோ என்று கேட்கவில்லை. கெளரி அம்மாள் இங்கிதம் அறிந்தவள்தான். தங்கள் காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அநேகமாக மறு நாளே அவர்கள் ஊர் திரும்பக்கூடும்.

இப்போது கிரிஜா என்ன செய்யப் போகிறாள்?


10

வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஒட்டம், மனதுக்குப்பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஒயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஒடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் தற்பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது.