பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

சுழலில் மிதக்கும் தீபங்கள்


காலம் உழுதுவிட்ட எண்ணற்ற கீற்றுக்களைத் தாங்கும். முகம், காவிச் சேலை; ரவிக்கை... உயர்ந்த வடிவம் கூனிக் குறுகவில்லை.

‘தமிழாம்மா?’

‘ஆமாம், பாட்டி...!’

‘எங்கேந்து வந்திருக்கே...?’

‘... ஊரெல்லாம் மதுரைப் பக்கம். இப்ப டெல்லில இருந்து வந்திருக்கிறேன்...”

‘நீ மட்டுமா வந்திருக்கே?’

‘தெரிஞ்சவாகூட வந்தேன்...அவங்கள்ளாம் இங்க முன்னமே வந்துட்டுப் போயிட்டா. இன்னிக்கு ஏதோ பூஜைன்னு ஹரித்துவாரத்தில் தங்கியிருக்கா. நான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்...நீங்க...இங்க வந்திருக்கிறீங்களா பாட்டீ?...’

மூதாட்டி பல்லில்லா வாயைக் காட்டிச் சிரிக்கிறாள்.

‘நான் இங்க வந்து அம்பது வருஷம்கூட இருக்கும். ! வருஷமெல்லாம் யார் கண்டது? கங்கை ஒடறா. வாழ்க்கை ஒடுறது...”

‘ஓ...?’ வியப்புத் தாளவில்லை.

‘நீங்க...அத்தனை வருஷத்துக்கு முன்னன்னா... எப்படி...’

‘எப்படின்னா...நேந்துடுத்து. அப்ப இங்கே சாமிஜி, இருந்தார். இப்பவும் ஆசிரமம் மேலே பெரிசா கட்டி, ரூமெல்லாம் தங்கக் கட்டியிருக்கா. மிஷன் நடக்கிறது. ஆனா...ஆதியில சாமிஜி வந்த நாள்ல இதோ இந்தக் குடில்ல தான் இருந்தார்...?’

‘நீங்க உங்களுக்கு எந்த ஊரோ...?’

‘எப்போதோ ஊர்... மதுரைப் பக்கம்னுதான் பேரு. இப்ப இதுதான் சொந்தம்.’