பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

83


இருபது இருபத்திரண்டு வயசுப்பிள்ளை. தேசத்துக்காக புரட்சிப் பண்ணக் கிளம்பி, இப்படி ஒதுங்கினதாச் சொல்வார். அப்ப எனக்கு இருபத்தஞ்சு வயசு, எங்களை இழுத்துப் போட்டவர் அவர்தான்.இவருக்கு மூச்சுப் பேச்சில்லைன்ன உடனே, அவர்தான் சிகிச்சை எல்லாம் செய்தார். அடுப்பில் சூடுகாட்டி ஒத்தடம் குடுத்து, மூலிகைப் புகைகாட்டி... ம், ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கங்கைக் கரையில் உடம்பைப் போட்டிருப்பாளா?...எல்லாம் ஆயிட்டது, ஊருக்கு அப்புறம்தான் காகிதம் போட்டார்கள். அந்த நிலையில் மூத்தாள் பிள்ளை புறப்பட்டு வந்தான். அந்த...பிரும்மசாரி ஆசிரமத்துப் பிள்ளையைப் பார்த்து அவன் பேசின. பேச்சு...சிவ, சிவா, சொல்லக்கூடாது. அத்தோட என்னை அழைச்சிண்டு போக அவன் வந்திருந்தான். நான், அவன் கண்ணில் படாமல் இந்தக் கரையில் ஒளிஞ்சு ஒளிஞ்சு நடந்து, காடாயிருந்த 'இந்த இடத்துக்கு, வந்தேன். பெரிய சாமிஜியிடம் சொல்லி

‘நீ போக வேண்டாம். இங்கே இரு...!’ன்னார்.

அவ்வளவுதான் இங்கேயே இருக்கேன்...’ சொல்வது போல் இவ்வளவு எளிதா என்று கிரிஜாவுக்குத்தோன்றுகிறது.

‘இப்ப இந்த ஆசிரமத்தில் யாரும் இல்லையா? உங்கள்...தப்பாக நினைக்காதீர்கள் பாட்டி, நீங்கள் ரொம்பவும் தைரியசாலின்னு தோணறது. ஒர் இளம் வயசுப் பெண், இங்கே துறவிகளுடன், பிரும்மசாரிகளுடன் தங்குவது எளிதாக இருக்காதே? பிரச்சனை இருந்திருக்குமே? - ஸ்வாமிக்கே கெட்டபேர் வருமே?...’

பாட்டி சிரிக்கிறாள்.

‘வெள்ளம் பெருகும்போது, பெரிய பெரிய மரங்களைக் கூட வேரோடு சாய்ச்சிட்டுப் போறது தான். அந்தப் பாவி மூத்தாள் பிள்ளை என்னை அழைச்சிட்டுப் போய்