பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

87


தனம் பார். அன்னிக்கு படிப்பும் அநுபவமும் இல்லாத எனக்கு திடீர்னு அவர் செத்ததும் பிரச்னைதான் வந்தது. அப்புறமா கேள்விப்பட்டு என் அத்திம்பேர் கூட வந்திருந்தார். சிறிசு, நீ வாழ்நாள் முழுக்க ஊரார் அவதூறுக்கு இப்படி இருப்பியா? வந்துடுன்னார். எல்லாத்துக்கும், அந்தப் பிரும்மசாரிதான் காரணம்ன்னார். அவரை எனக்கு அப்ப உள்ளும் புறமுமாத் தெரியாதுதான், அனாலும் ஒரு முடிவு. என்ன வந்தாலும் ஊருக்குப் போறதில்லை. பிறந்தகத்து இல்லாமை, புக்கத்துக் கொடுமை, எல்லாத்துக்கும் மேல புருஷனை இவளே கங்கையில் அமுக்கிக் கொன்னுட்டான்னு சொல்லப்போகும் நாக்குகள்...இதெல்லாம் தீர்மானமாகக் கிடுத்து...திரும்பிப் போறதாக முடிவு செஞ்சிருந்தாலும், ஏன் வந்தோம்னு பின்னால் நொந்துகொள்வதாக இருக்கக் கூடாதுங்கறதுதான் என் நிச்சயம்...’


வானம் கறுத்துக்கொண்டு வந்து தொங்குகிறது, கங்கையின் பரப்பும் மக்கள் கலகலப்பும் மங்கிப்போகின்றன. தான் உயிரை மாய்த்துக் கொள்ள வந்ததாக இவர் எண்ணி விட்டாரோ என்று நினைத்து அவள் உள்ளுர நானமடைகிறாள்.

‘மழை கொட்டும்போல இருக்கு. இங்க தங்கப்போறி யாம்மா...’

‘ஒ. இல்லை பாட்டி. நான் திரும்பிப் போகணும். ஒர் ஆறுதலுக்காக, தெளிவு தேட, பரபரப்பில் இருந்து விடுபட்டு வந்தேன். உங்களை மறக்கவே மாட்டேன். எனக்கு வெறும் வயிற்றுக்கு மட்டும் அன்னமிடல. கவி பாரதி சொன்னார். ஞான உணவும் தோள் வலியும்னு அது ரெண்டும் தான் நமக்கு தைரியம். நம்பிக்கை...அந்த ரெண்டும் எனக்கு உங்க்கிட்ட வந்ததில கிடைச்சிடும்னு கிளம்பிப் போறேன்...”

‘போயிட்டு வாம்மா...நம்மாலானது ஒண்ணுமில்லேன்னு நினைக்காம. நம்மாலும் ஆகும்னு நினைச்சிண்டு போ!