பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

7


ஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.

“சாரு, கவிய எழுப்பு! ‘அஞ்சுமணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே?’

வேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்துபோன இடத்தைத் தண்ணிர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.

கிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்கித் துடைக்கிறாள்.

வந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கி யிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சாப்பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் சீஸ்கறி ஸாண்ட் விட்ச் பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.

கடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும், இவனுக்கு ஒன்பது வயது தான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.

“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா...”

“அதுக்கு இப்பத்தான் சொல்றதா? போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே?”

  • சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா...”