பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

சுழலில் மிதக்கும் தீபங்கள்


அவளுக்குத் தெளிவு துலங்குகிறது.

பிரச்னை பிரச்னை என்று சிக்கிக் கொண்டதாக, யாரோ வந்து கரையேற்றவேண்டும், விடுவிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? மாமியார், அவளும் ஒரு பெண். இந்த மடிக்கூடு வெறும் அர்த்தமற்ற போலிச் சடங்குகள். உள்ளும் புறமுமான மனிதத்துவத்தை விரட்டிவிடும் கொடுமைகள் என்று எடுத்துச் சொல்லேன். அந்த வீட்டில் உனக்கும் ஒரு உரிமை உண்டு. அவன் சொல்லியதால் மாற்றம் காண வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? உன் குழந்தைகளின் நல்ல மன வளர்ச்சியில் உனக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு... பின்னர்...

விடுவிடென்று இறங்குகிறாள், அவள் ஒரு முச்சக்கர ஊர்தியில் அமரும்போது மழை ‘சோ’ என்று கொட்டுகிறது. திரும்பி வருவதற்குக் கரையோர டெம்போக்களில் ஒன்றிலேயே அமர்ந்துவிடுகிறாள். மெழுகுச்சீலைத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறான். அப்படியும் மழைச்சாறல் உள்ளே வந்து சேலையை நனைக்கிறது. எட்டுப்பேர் நெருக்கி உட்காரக்கூடிய இருக்கைகளில், பதின்மூன்று பேர்களுக்கு இடம் கொடுக்க மழையின் நடுவே ஊர்தியை நிறுத்துகிறான்...மருந்துத் தொழிற்சாலை நிறுத்தத்தில், ஒர் இளம் பெண்ணும் அவள் கணவனும் ஏறுகிறார்கள். புதுமணத் தம்பதியாகத் தோன்றுகிறது. நெற்றிச் சிந்துாரமும், விரல் நுனிகளின் சாயமும், அரக்குச் சிவப்பில் சரிகை நூலால் பூவேலை செய்த சேலையுமாக, கதகதப்பாக இவளுடன் நெருங்கிக் கொள்ள, கணவன் அவளோடு ஒன்றிக்கொள்ள அமருகிறார்கள்.

பெண்ணின் கைப்பையோடு, அவன் வைத்துக்கொண்டிருக்கும் தினசரியும் இணைந்து அவள்மீது படுகின்றன. இந்தி தினத்தாள்தான். ஆனால், கொட்டை எழுத்துத் தலைப்பு அவள் கண்களைக் கவருகிறது.

விமானத்தில் தீப்பிடித்தது...! வியாழக்கிழமை பம்பாயில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பிய விமானம்...இதற்குமேல்