பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

89


மடிப்பில் தெரியவில்லை. கிரிஜாவினால் இதற்குமேல் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ‘அந்தப் பத்திரிகையை இப்படிக் கொடு...முழுசும் பார்த்துவிட்டுத் தருவேன்’ என்று சொல்ல நா ஒட்டங்கள் யாவும் அந்த எழுத்துக்களின் பின்னணியில் அழிந்துபோகின்றன. விமானத்தில் தீப்பிடித்து...

பம்பாய் சென்று அங்கிருந்துதானே திருவனந்தபுரம் செல்வதாகச் சொன்னான்!

ஓ! அவள் கிளம்பி வந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? அங்கு குழந்தைகள்... ஆம். குழந்தைகளுக்கு அவளை விட்டால் யார் துணை?... ஏறத்தாழப் பதினெட்டு வருஷங்கள் அவனின் நிழலில் அண்டி அவனுக்குப் பணி விடைகள் செய்து, மூன்று மக்களைப் பெற்றிருக்கிறாள் இந்தப் பந்தம், அகன்று விடுமோ? ஏதேனும் ஆய்விடுமோ? ஆய்விட்டால்...? ஹரிகிபைரி வரும் வரையில் கிரிஜா விக்கித்துப்போய் உட்கார்ந்து இருக்கிறாள்.

மழைவிட்டு வானம் வெளிவாங்கி இருக்கிறது. முதலில் கிரிஜா இங்கே இறங்குவதாகத்தானிருந்தாள். ஆனால் இப்போது. அந்தத் தம்பதி இறங்குமிடத்தில் இறங்குவதாகத் தீர்மானிக்கிறாள்.

ரயில் நிலையத்துக்கருகில் அவர்கள் இறங்குகின்றனர். இறங்கும்போது, அந்தப் பத்திரிகையை அவள் அவர்களிடம் கேட்குமுன், அவன் கைப்பெட்டியை எடுக்கையில் அது விழுகிறது. கீழே விழுந்த அதைக் கிரிஜா சட்டென்று எடுக்கிறாள்.

‘...கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?...’ அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அவசரமாகப் பிரிக்கிறாள். விமானப் படம் போட்டிருக்கிறது. ஐந்து பேருக்கு லேசான காயம். விமானம் பழுதுற்றதை உடனே கண்ணுற்றுவிட்டதால் பம்பாய் விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் பெற்றது...

திருப்பிக் கொடுத்து விடுகிறாள்.