பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

சுழலில் மிதக்கும் தீபங்கள்


பலன் தெரியுமா என்று கிளர்ந்து வரும் குரல். அந்தக் குரலில் கவிதாவும், சாருவும்கூடச் சமையலறையில் இருந்து ஒடி வருகிறார்கள். குழந்தைகள் இருவரும் வண்ணமிழந்து பொலிவிழந்து காட்சியளிக்கின்றனர். கவிதாவின் மாக்ஸியில் எண்ணெய்ப் பிசுக்கு, மஞ்சள் கறை எல்லாம், அவள்தான் சமையல் வேலை செய்கிறாள் என்று அறிவிக்கின்றன. சாருவின் விரலில் ஒரு துணிசுற்றிய காயம் ஊகிக்க முடிகிறது.

‘ஹாய் அம்மா, எங்கம்மா போயிட்ட? கிச்ச்ன்ல வேலை செய்யுங்கடி கழுதைகளான்னு அடிக்கிறார்மா. அப்பா? கீழ பன்டியோட அம்மா டிக்குவ அனுப்பிச்சு, ரொட்டியும் சப்ஜியும் பண்ணிக்குடுக்கச் சொன்னா, ஒரு நாளக்கி. அவன் கிச்சன்ல வரக்கூடாதுன்னு பாட்டி கத்தறா. ரத்னாக்கா வந்தா. அவளைப் புடிச்சி பாட்டியும் அப்பாவும் திட்டினா. ரத்னாக்கா சொல்லித்தான் நீ ஒடிப்போனியாம்!.ரத்னாக்கா அப்பாகிட்ட ரொம்பச் சண்டை போட்டாள்...’ என்று சாரு குழந்தை போல் ஒப்புவிக்கிறாள்.

‘உள்ள போங்கடி கழுதைகளா! ரெண்டு பேரையும் எங்கானும் போர்டிங்ல கொண்டுத் தொலைக்கணும். ஒடிப் போயிட்டு இந்த வீட்டில நுழைய, என்ன துணிச்சல் இருக்கணும்? அரித்துவாரம் போனாளாம், அரித்துவாரம். எங்கிட்ட காது குத்தறா. எதுக்கடி போன இப்ப அரித்துவாரம்?’

‘இத பாருங்க, குழந்தைகளை வச்சிட்டு இப்படிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’

அவன் ஒரெட்டு அவளை அறைவது போல் முன்னே வருகிறான்.

‘பல்லை உடைப்பேன், நாயே. என்னடி உரிமைப் பேச்சுப் பேசறே? ஒடிப்போயி எங்கோ சீரழுஞ்சு வந்துட்டு? எனக்கு வெளியில் தலை நீட்ட முடியல...’

பாட்டி இப்போது மெள்ள எட்டிப் பார்க்கிறாள்.