பக்கம்:சூடாமணி நிகண்டு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வாய்முதல் தெரித்தது மணியே என்றும், 'மணிகண்டு தாழ்ந்த குடையன் என்றும் மாணிக்கத்தை ‘மணி. என்றே குறித்தார். இலக்கியங்களிலும் உரைகளிலும் மாணிக்கத்தை ‘மணி’ என்று அறியும் நாம் மாணிக்கவாசகரை 'மணிவாசகர்' என்கின்றோம். மணியை வைத்து இவ்வளவு விளக்குவது இந் நூற் பெயரின் அடித் தளத்தை அணுகுவதற்காகும். இவ் அணுகலுக்கு நீலத்தைப்பற்றி இந்த அளவே அறிவது போதுமானது. எனவே, நீலத்தை இவ்வளவோடு நிறுத்தி மாணிக்கத்தைக் காணவேண்டும். மாணிக்கத்தின் நிறம் சிவப்பு. 'மாமணி செம்மணி மாணிக்கம்’ என்று பிங்கலர் காட்ட, 'செம்மையே மற்றை மாமணி மாணிக்கம் என்று மண்டலவர் தேற்றே காரம் கொடுத்து உறுதிப்படுத்தினார். இதன் சிவந்த நிறத்திற்கு, மாதுளம் பூ, செம்பருத்திப் பூ, கவிரம் பூ, மஞ்சாடிப் பூ. உலோந்திரப்பூ குன்றிமணி, முயலின் குருதி, செம்மை ஈயம் (சிந்துாரம்) ஆகிய எட்டையும் அடியார்க்குநல்லார் மேற்கோள் பாடலால் காட்ட கல்லாடனாரும் வழிமொழிந் தார். மிளிரும் மாணிக்கத்தின் ஒளிக்கு, கதிரவன், நெருப்பு, விளக்கு, மின்மினி, தாமரைப் பூ, செங்கழுநீர்ப் பூ மாதுளம் பூ, மாதுளை முத்து, வானம்பாடியின் கண், பட்டுப்பூச்சி ஆகிய பத்தையும் முன் கூறிய இருவரும் குறித்தனர். சிவந்தும் திறந்தும் விளங்கும் இம்மணி உண்மையில் மணிகளில் எல்லாம் தலையாய மணி. இதன் பெருமையை எல்லாம் உளத்துக்கொண்டே மண்டலவர் தம் நூலுக்குப் பெயர் சூட்டினார். ஆனால் மணி என்னும் ஒரு சொல் மட்டிலும் இந்நூற்பெயரைக் குறிக்கவில்லை. அடைமொழியுடன் சேர்ந்த கூட்டுச் சொல்லாகவே குறிக்கிறது. ஒரே ஒரு அடைமொழி கூடிய கூட்டுச் சொல்லாக அமைந்திருக்குமானால் ஆய்விற்கு இடம் இல்லை. இரண்டு வகை அடைமொழிகள் தனித்தனியே மணியுடன் கூடிக் குறிப்பதால் சற்று ஆழமாகக் காணவேண்டியுள்ளது. 117