முகவுரை
இவ்வசன நூலுக்கு முதனூலாகிய சூளாமணிக் காவியம் தோலாமொழித் தேவர் என்னும் பெயர்கொண்ட கவிஞர் பெருமானால் இயற்றப்பட்டது. அவர் ஜைன மதத்தைச் சார்ந்தவர். தற்காலத்தில் சித்தூர் ஜில்லாவைச் சேர்ந்த கார்வேட்டு நகரில் முன்பு சிற்றரசனாயிருந்த விஜயராஜன் காலத்திலிருந்தவரென்பது நூற்சிறப்புப் பாயிரத்தால் விளங்குகிறது. ஆனால் எக்காலத்திலிருந்த விசயனென்பது சரித்திரத்தால் விளங்கவில்லை, எனினும் ஜைனமதம் பிரபலமாயிருந்த கி.பி.ஆறாம் நூற்றாண்டில் இவர் இருந்திருக்கலாமென்று ஒருவாறு ஸ்தூலமாய்ச் சொல்லலாம்.
நூலாசிரியரையும் உரையாசிரியரையும் அவர்தம் இயற்பெயர்கொண்டழைக்காது மற்றொரு காரணம் பற்றிய பெயரால் அழைப்பது முற்காலத்திய வழக்கமாயிருந்தது. உதாரணமாக, திருக்கோவையார் உரையாசிரியர், பேராசிரியர் (மஹோபாத்தியாயர்) என்றே வழங்கப்படுவார். அதுபோலவே, "இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கிணங்க, தொன்மையாகிய பழங்கதை மேலதாய் இழுமென்னுமினிய மென்சொல்லானியன்ற விழுமிய பொருட்டொடர் நிலைச்செய்யுளாகிய 'தோல்' என்பதனைக் கூறும் மொழியினை யுடையார் என்ற காரணப் பெயரிடப்பட்டு நமது ஆசிரியரும்