பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், கோ. சந்தானம், இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி, அறநிலையம் (ம) செய்தித் துறை மற்றும் இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு) பதிப்புரை மொழி வளர்ச்சியில் அகரமுதலியின் பங்கு மிகப் பெரியது என்றால் அது உண்மையே. பல்வேறு துறைகளில் அறிவை வளர்த்துக் கொள்ள விழைவோருக்கு, அவ்லத்துறை தொடர்பான கலைச்சொற்கள் பெரிதும் பயன் தருவதாயிருக்கும். தாய்மொழியில் சொல்வளம் நிறைந்த களஞ்சியமாக அகரமுதலிகள் திகழ்கின்றன. நல்ல அகரமுதலி மக்களைச் செவ்விய மொழிப்பாங்குடையவராக மாற்றும். “Dictionary might bring people closer to the perfect language" (Encyclopaedia Britannica) என்ற செய்தி நினைத்தற்குரியது ! ஒரு மொழியில் வெளிவந்துள்ள அகரமுதலிகள், அம்மொழி எந்தெந்தத் துறைகளில் சொல்வளம் பெற்றிருக்கிறது; இன்னும் எந்தெந்தத் துறைகளில் சொல்வளம் பெறவில்லை என்பதைக் காட்டிவிடும். சொல்லிற்குப் பொருள் கூறும் முயற்சியே முதன் முதல் அகரமுதலி தோன்றுவதற்குக் காரணம். கி.மு.700 அளவில் மெசபடோமியாவில் சில அக்கேடிய சொற்களுக்குப் பொருள் கூறும் எழுத்துச் சான்று கிடைத்திருப்பதாகவும் அதுவே உலக முதல் அகராதிக்கு வித்து எனவும் கூறுகின்றனர் (Encyclopaedia Britannica). அதற்குச் சமகாலத்திய தொல்காப்பியத்தில் உரிச்சொல் பகுதி அப்பொருள் கட்டியதே என்பர் தமிழறிஞர். இலத்தீன் சொல் மூலத்திலிருந்து தோன்றிய ‘Dictionary' என்ற சொல்லும், கிரேக்கச் சொல் மூலத்திலிருந்து பிறந்த 'Lexicon' என்ற சொல்லும் காலப்போக்கில் அகாமுதலியையே குறிக்கத் தொடங்கியது என்பர் அறிஞர் பெருமக்கள். நமது தமிழ்மொழி அகரமுதலி வரலாற்றில், கி.பி. 1594 ஆம் ஆண்டில், சிதம்பர இரேவண சித்தர் என்னும் புலவர் 'அகராதி நிகண்டு' என்னும் பெயரில் ஒரு நூல் இயற்றியதே முதல் அகராதியாகக் கருதப்படுகின்றது. மேலை நாட்டில் முதன் முதலாக அகரவரிசையில் அகராதி நூல் தோன்றியது பதினேழாம் நூற்றாண்டில்தான். அஃதாவது கி.பி. 1612-ஆம் ஆண்டில் இத்தாலி மொழியில் முதல் முதலாக அகரவரிசையில் அகராதி தோன்றியது எனக் கூறுவர். இவ்வகராதிக்கு முன்பே தமிழில் அகராதி நிகண்டு தோன்றிவிட்டது என்பர் மொழி ஆய்வாளர்கள். பின்னர், அவ்வகை அகரமுதலி வரலாற்றில் தமிழ்ச் சொல்லுக்குத் தமிழ்ச் சொல்லாலேயே பொருள் கூறும் தனித்தமிழ் அகராதிகள் பல தோன்றுதற்கு முன்னோடி முதல் நூலாகத் திகழ்ந்தது வீரமாமுனிவரின் சதுரகராதியேயாகும். இது பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டிருந்ததின் காரணமாக 'சதுர் அகராதி' எனப்பட்டது. நாளடைவில் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலரால் தொகுக்கப்பட்ட மிகப்பெரிய தமிழகராதிகள் பலவும் இச்சதுர் அகராதியைப் பின்பற்றி எழுந்தனவே என்றால் மிகையில்லை,


2--...