பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 11, PART 1, வரலாறு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை போகின்றன. இத்தகு சீர்கேடுகளைக் களைந்து சொற்பிறப்பு அகரமுதலி மூலம் தமிழுக்குப் புத்தாக்கம் கொடுத்தவர் பாவாணர் ஆவார். இலக்கியச் சொல்லாட்சிகள் முதல் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கி, சொற்களின் வடிவம், வரலாறு, பொருட்சிறப்பு, வேர்மூலம், இனச் சொல் வடிவம், கலைச் சொல்லாக்கம், வட்டார வழக்குச் சொற்கள் என அனைத்தையும் சிறப்புற விளக்குவது சொற்பிறப்பியல் அகரமுதலியின் தனிச் சிறப்பாகும். முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம்; உலக முதன்மொழி தமிழ் என்ற வரலாற்று உண்மையின் அடிப்படையில் தம் ஆராய்ச்சியை அமைத்து முதன் மொழியாகிய தமிழின் சொற்களைத் துருவி ஆராய்ந்து வேர் விளக்கம் கண்டு உலக அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தியவர் பாவாணர் எனில் அது மிகையன்று. தொல்காப்பியர் காலத்திற்குப் பின் தமிழன்னை தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் முயற்சிக்கு வித்திட்டு அடித்தளம் அமைத்துத் தந்தவர் பாவாணர், மேலைநாட்டு அகராதிகளெல்லாம் சொற்பிறப்பை இனச்சொற்கள் மூலத்தோடு சுட்டிக் காட்டும். அதற்குமேல் சொல் வரலாற்றை விரிவாகத் தருவதில்லை. காரணம் அம்மொழிகளில் அதற்கு இடமில்லை. பாவாணரின் சொற்பிறப்பு அகரமுதலியில் சொற்பொருளை ஏரண முறையில் எடுத்துக்காட்டிச் சொல்வரலாற்றைப் பொருட் பொருத்தத்துடன் புகல்வதே தனிச்சிறப்பு. இனச்சொல் காட்டுதல், ஒரு பொருள் குறித்த பலசொல் காட்டுதல், ஒரு பொருளின் இனவகைகள் காட்டுதல், சொற்களின் வேர்மூலத்தைப் பாவாணரின் வேர்ச்சொல் கட்டுரையில் சுட்டியுள்ள நெறிமுறைப்படி மரபிலக்கணம், மொழியியல் கூறுகள், இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, உலக வழக்கு ஆகியவற்றின் அணுகு முறைகளால் கண்டறிந்து கூறும் நெறிமுறையால் எம்மொழிச் சொல்லையும் நம்மொழிச் சொல்லாக்கும் நனிசிறந்த வேர்ச்சொல் வளமிக்கது தமிழே என்று நிறுவிய பெருமை செந்தமிழ்க் சாவலர் பாவாணரையே சேரும். வடமொழி, ஆங்கிலம் முதலிய பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்து பெருங்கேடு விளைக்கின்றன. அயன்மொழிச் சொற்களை வேண்டாது வழங்குவதால் தமிழ்ச்சொற்கள் வழக்கிழந்து இறந்துபடுவதுடன், புதுச்சொல் புனையும் ஆற்றலும் அவாவும் தமிழ் அறிஞர் பெருமக்களுக்கு அற்றுப் சொற்பிறப்பியல் அகரமுதலியின் நெறிமுறையும் பயன்பாடும் ஆங்கிலம் போன்ற மேனாட்டு மொழிகளில் வெளிவந்துள்ள சொற்பிறப்பியல் அகரமுதலிகளிற் காணப்படும் சொற்களுக்கு எளிதாக சொன் மூலம் காட்டுவதையே சொற்பிறப்பியல் அகரமுதலி என்று மேனாட்டார் கருதுகின்றனர். ஆனால், பாவாணரின் சொற்பிறப்பியல் அகரமுதலி சொன்மூலம் காட்டுவதோடு, சொற்களின் வேர்மூலம் காட்டுதலால், வேர்ச்சொல்லுக்கும் வேர்ச்சொல் கண்டு ஆணிவேர், பக்கவேர் சல்லிவேர் எனப் பகுத்தாய்ந்து மொழி வளர்ச்சிக்கு உரமூட்டுவதோடு, உலக மொழிகளுக்கு வழிகாட்டும் தமிழ்ச் சொற்களஞ்சியமாகத் திகழ்கிறது. கொச்சைச் சொற்களும், கொடுந்தமிழ்ச் சொற்களும் உலக வழக்கில் தனிச்சொல்லாகவும், கூட்டுச் சொல்லாகவும் காட்டப்படுகின்றன. ஆனால் சொற்பிறப்பியல் அகரமுதலியில் அச்சொற்களின் செந்தமிழ் வடிவம். சொற்பிறப்பு, சொற்றிரிபு கண்டறிந்து கூறுவதால் ஒரு நாட்டின் வரலாற்றைப் போலச் சொல்லின் வரலாறு காலத்தையும், மொழிக் கலப்பையும் விஞ்சி வரலாறு படைக்கிறது. தமிழ் ஞால முதன்மொழி, திரவிடத்திற்கு தாய், ஆரியத்திற்கு மூலம் என்னும் பாவாணர் கொள்கை நெறிப்படி கூட்டுச் சொற்கள், மரபு வினைகள் ஆகிய அனைத்துச் சொற்களுக்கும் சொற்பிறப்பு கண்டறியும் முனைப்பால், உலக மொழிகளில் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதை எளிதாகக் கண்டறியச் சொற்பிறப்பியல் அகரமுதலி வழிகாட்டுகிறது. கூட்டுச் சொல், தனிச்சொல் ஆகியவற்றின் செவ்விய வடிவம் சொற்பிறப்பியல் அகரமுதலியில் காட்டப்படுவதால், அச்சொற்களின் முந்து தமிழ்வடிவம், அச்சொற்களுக்கும் உலக மொழிகளுக்கும் உள்ள தொடர்பு, சொல் தோன்றி வளர்ந்த நெறிமுறை ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. மொழிகளின் பிறப்பையும், நெறிமுறைகளையும் வரையறுத்துக் கூறுவதால், உலகின் பலமொழிக் குடும்பங்களிலும் நாளடைவில்