பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

செந்தமிழ் பெட்டகம்

பெருவளத்தானும் ஒருவர் பின்னொருவராக நிறுத்தப்படுகின்றனர் குறுநிலத் தலைவர் பாட்டுக்களிலும் சேர நாட்டுத் தலைவர், பாண்டி நாட்டுத் தலைவர், சோழ நாட்டுத் தலைவர் என்ற வைப்புமுறையே காணப்படுகிறது

இப்புறநானூறு காட்டும் சேரரது ஆட்சியில் ஒரு பால் மலைமணந்த காடுகளும், ஒருபால் கடலும் கிடந்து நிலப்பரப்பைச் சுருக்கினமையால், “இடஞ்சிறிது என்னும் ஊக்கம் துரப்ப”, நாட்டவர் குடி பெருகி வாழ்வது குறித்து வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும், “நாடு கண் அகற்றும்” முயற்சியும் நாட்டமும் முற்பட்டுத் தோன்றுகின்றன சேரவேந்தருள், அந்துவஞ்சேரல், கடல்பிறக்கோட்டிய வேல் கெழுகட்டுவன், செல்வக் கடுங்கோ வாழியாதன், கருவூரேறிய ஒள்வாட்கோப் பெருஞ்சேரலிரும் பொறை, சேரமான்குட்டுவன் கோதை, குடக்கோச்சேரலிரும் பொறை, குடக்கோ நெடுஞ்சேரலிரும் பொறை, சேரமான் கோக்கோதை மார்பன், தகடுரெறிந்த பெருஞ்சேரலிரும் பொறை, பாலைபாடிய பெருங்கடுங்கோ, பெருஞ்சேரலாதன், பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன், மாந்தரஞ்சேரல், சேரமான்மாவண்கோ, வஞ்சன், கணைக்காலிரும் பொறை, கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை முதலிய வேந்தர்கள் இந்நூலில் இடம் பெறுகின்றனர்

அடுத்து நிற்கும் பாண்டியர்களுள், அறிவுடைநம்பி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, கருங்கையொள்வாட்பெரும்பெயர் வழுதி, கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி, கூட காரத்துத் துஞ்சிய மாறன்வழுதி, சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், பாண்டியன் நெடுஞ்செழியன், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன், பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்-