பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

செந்தமிழ் பெட்டகம்

கார் என்னும் பெரும் பொழுதும், மாலையென்னும் சிறு பொழுதும் இதற்குரிய காலமென்றும் புலவர்கள் அமைப்பர் இவர்கள் வஞ்சி மலரை அடையாளமாக அணிவர்

3 உழிஞை யென்பது ஒரு வேந்தனுடைய தலைநகரைக் கைப்பற்ற அவனுக்குரிய அரணை அவன் பகையரசன் முற்றுகையிடுதலும் ஆகும் தொல்காப்பியரைத் தவிர்ந்த மற்றையோர் அரணைக் காப்போர் பொருவதை நொச்சித் திணை யென்பர் இதற்குரிய இடம் கழனியும் கழனி சூழ்ந்த பகுதியும் என்றும், காலம் ஆறு பெரும் பொழுதும் வைகறையென்னும் சிறு பொழுதும் என்றும் புலவர் அமைப்பர் புறத்தோன் உழிஞை மலரையும், அகத்தோன் நொச்சியையும் அடையாளமாக அணிவர்

4 தும்பை யென்பது தன் ஆற்றலை உலகம் புகழ வேண்டிப் போர் செய்ய வந்த வேந்தனை மாற்று வேந்தனும் தன் ஆற்றலை உலகிற்கறிவிக்க எதிர்த்துச் சென்று பொருவது இப்போருக்குரிய இடமாகப் பெருமனலுலகமான கடலைச்சார்ந்த நிலப்பகுதியைக் கொண்டனர் ஆறு பெரும்பொழுதும், மாலையான சிறு பொழுதும் தும்பைக்குரிய காலமெனப் புலவர் கூறுவர் இருவருந் தும்பை மலரை அடையாளமாக அணிவர்.

5 வாகை யென்பது அந்தணர், அரசர், வணிகர், வேளாளரென்போரும், அறிவரும் தாபதரும் பொருநரும் ஆகிய பலருடைய இயல்புகளை மற்றை யோரினும் மிகுதிப்படுத்திக் கூறலாகும் இவ்வாறு கூறுதலில் தாமே கூறலும் மற்றையோர் கூறலுமாகிய இருநிலைமையும் உண்டு பாலைக்கு நிலமில்லையானாற்போல, இதற்கும் தனியே நிலமின்றி நால்வகை நிலமும் இடமாகும் போரில் வெற்றி கொள்வதும் வாகையாகும் வெற்றி கொண்டோர் வாகை மலரை அடையாளமாக அணிவர்