பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

செந்தமிழ் பெட்டகம்

வரும் காமப் பொருளைக் கூறுங்கால் ஒருவருடைய இயற் பெயரைச் சுட்டுவதும் பாடாண்திணையாகும் முனி வரையும், பார்ப்பாரையும், ஆனிரையையும், மழையையும், முடியுடை வேந்தரையும், உலகையும் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும், தேவர்களை வாழ்த்துவதும் பாடாண் பாட்டாகும்

கடவுளரைக் கடவுட் பெண்டிரும் மானிடப் பெண்டிரும் காதலிப்பதும், கடவுளர் மானிடப் பெண்டிரை நயப்பதும் பாடாண் பாட்டாகும் மற்றும், குழந்தைகளிடம் அன்புற்றுக் கூறும் பிள்ளைத் தமிழும், கடவுளரும் மக்கள் தலைவரும் உலாப் போகும்போது எழுபருவப் பெண்டிரும் காதலிப்பதாகக் கூறும் உலாவும் பாடாண் பாட்டேயாகும் கடவுள் வாழ்த்தொடு வரும் கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பனவும் பாடாண் பாட்டு இனி அரசர்களையும் வள்ளல்களையும் பாடும் போது கூறும் இயன் மொழி வாழ்த்து, கடைநிலை, பரிசில் நிலை, பரிசில் விடை என்பனவும், செவியறிவுறூம் புறநிலை வாழ்த்து என்பனவும், அரசர் துயில்வது கூறும் கண்படை நிலையும், அவர்களைத் துயிலெழப் பாடும் துயிலெடை நிலையும், கூத்தரையும் பாணரையும் பொருநரையும் விறலியரையும் ஆற்றுப் படுத்தும் ஆற்றுப்படையும், பிறந்த நாள் விழா, முடிசூட்டு விழா முதலியனவும் பாடாண்திணையில் அமைத்துப் பாடப்பெறம்