பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

செந்தமிழ் பெட்டகம்

‘செல்வி முப்பாலுக்கு ஒருரையின்றி ஒன்பது சென்றும் ஐயுறவாக நையுறுகாலை’ என்ற பரிமேலழகர் உரைப் பாயிரத்தால் உணரலாம் இத்தொடரில் ஒன்பது உரைகள் எழுதப்பட்டும், திருக்குறளில் வரும் ஐயம் தெளியமாட்டாமல் தமிழுலகம் வருந்தியதாக, அந்த ஐயங்கள் நீங்கப் பரிமேலழகர் செவ்விய நல்லுரை செய்தாரென்பதால் அவ்வொன்பது உரையாசிரியருள் ஒருவராகிய 'பரிதியார்’ அவர்க்கு முறபட்டவராதல் தெளிவாதல் காண்க

“இருள்சேர் இருவினையும்” என்ற குறளுக்கு, “மும்மலவித்தாகிய பாவமானது சிவகீர்த்தி பாராட்டு வானிடத்து இல்லை” என்றும், நற்றாள்’ என்பதற்கு “அறிவாளனான சிவன்சிபாதம்” என்றும் இவர் உரையெழுதியுள்ளமையால், இவர் சைவசமயத்தினர் ஆவர்

இவருரை, பதவுரையாகவோ பொழிப்புரையாகவோ இல்லை கருத்துரையாகவே யமைந்துளது இவருரையால் திருக்குறள் கருத்தை விளங்கிக் கொள்வது அரிது இலக்கண முடிபுகளும் சிலவிடங்களில் சரியாகவில்லை. நல்லாரெனப்படுவது (324) என்புழி ‘நல்லார்’ எனப்பாடங் கொண்டு இவர் எழுதிய உரையைக் காண்க 1950 ஆம் ஆண்டில் தருமபுர ஆதீன வெளியீடாக வந்துள்ள திருக்குறள் உரைவளம் என்னும் நூலில் இவருரையும் சேர்ந்துள்ளது.