பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

179

சிறந்தாரது ஒழுக்கத்தினை மேல்வரிச் சட்டமாக நாடகத் தமிழாய்ப் புனைந்துரைப்பதே அன்றித் தனியொருவர் ஒழுக்கமாகப் பெயர் கூறிப்பாடுவது பழைய தமிழ் வழக்கமன்று. இந்த நூலில் பாண்டியனைக் குறிப்பிடுவதால் இது அகப்பாட்டு ஆகாது; அரசனது போர்ப் பாசறையைப் பற்றியதே என்று உரையாசிரியர் கூறுகின்றார்.

ஆற்றுப்படை என்பது ஒருவகையான பாடல் மரபுடையது. புரவலரைக் காணாது வறுமையில் வாடுகின்றான் ஒரு கலைஞன். புரவலன் ஒருவனைக் கண்டு பரிசில்கள் பெற்றுச் சீரும் சிறப்புமாகத் திரும்புகின்றான் மற்றொரு கலைஞன். இவன்.அவனைச் பார்க்கிறான்; இரக்கத்தால் அவன் வாழ வழி காட்டு கின்றான். அவன் புரவலனிடம் சென்றால், “வறுமை தீரும், கலை வளரும்; தன்மானம் அழியாது” என்று கூறி அப்புரவலனுடைய பெருமையையும் விளக்கி, அவன் ஊருக்குப் போதும் வழியையும் சுட்டுகின்றான்; பெறப் போகும் பரிசில்களைப் பற்றிக் கனவு காணுமாறும் செய்கின்றான். பொருநர், பாணர், கூத்தர் என்ற கலைஞர் தம்முன் ஒருவரை ஒருவர் ஆற்றுப்படுத்தும் மரபை இங்கே காணலாம். (தொல்காப்பியம் 103).

பொருநன் என்பான் மற்றொருவர்போல வேடம் கொண்டு போர்க்களம் பாடுவோன் ஆவான், பாணன் என்பான் பாடுகின்ற பழைய குலத்தைச் சேர்ந்தவன். இப்பாணன் மரபினர் சிறுபாணர், பெரும்பாணர் என்று இருவகையினராவர். ஏழு நரம்பு உள்ள சீறியாழ் கொண்டு பாடுவோர் சிறு பாணர். 21 நரம்பு உள்ள பேரியாழ் கொண்டு பாடுவோர் பெரும்பாணர். கூத்தர் என்பவர் எண்வகைச் சுவையும் மனத்தின் கண் பட்ட குறிப்புக்களும் புறத்துப் புலப்பட ஆடுவோர், எனவே மூவைகையினரானாலும் உண்மையில் நால்வகையினர் ஆவர். இந்த நான்கு வகையினரையும் ஆற்றுப்-