பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

183

கனவு கலைச் செல்வமாய்ச் சிவனது திருமேனியாய் விளங்குவது கெடாதபடி அரிய கலிங்கம். தந்தான் ஆய், அன்பும் அறமும் பாடுகிற புலவர் சொற்களில் ஈடுபட்டு, அவர்கள் வாடாது ஏறிப் போகக் குதிரையும் தேரும் தந்தான் காரி, தன்னை நட்புரிமை கொண்டு வந்தடைந்த கலைஞர், வருத்தமின்றி வாழ்க்கை நடாத்த, நடைப் பரிகாரம் தந்தான் நள்ளி, தான் நீண்டநாள் வாழாது செத்தாலும் கலையே நீடு வாழவேண்டுமெனக் கலை வடிவான அவ்வைக்கு நெல்லிக்கனி தந்தான் அதிகன், கோடியருடைய பாட்டிலும் கூத்திலும் ஈடுபட்டு, அவர்கள் நலிவின்றி வாழ நாட்டையும் கொடுத்தான் ஓரி என முறையே பாடி, அவர்கள் வள்ளன்மையை எல்லாம் நல்லியக்கோடனிடம் கண்டு மகிழ்கின்றார் புலவர்.

நல்லியக்கோடனது ஊருக்குச் செல்லும் வழியைக் கூறுவாராய், அவன் நாட்டின் வளத்தினைப் புகழத் தொடங்கி, எயில் பட்டினத்தாற் சிறந்த அவனுடைய நெய்தல் நிலத்து நுளையர் வாழ்க்கையினையும், வேலுரோடு சார்ந்து விளங்கும் முல்லை நிலத்து எயிற்றியர். விருந்தோம்பும் திறத்தினையும், ஆமூரால் சிறந்த அவனது மருத நிலத்தில் வாழும் அந்தணரது ஊறுகாய்ச் சோறும், உழத்தியர் தரும் கவைத்தாள் நண்டின் கலவையும் என இவற்றையும் எல்லாம் இருந்ததனை இருந்தபடி கூறும் இலக்கியச்சுவை தோன்றப் பாடுகின்றார்.

நல்லியக் கோடனின் சிறப்பினையெல்லாம் கூறி யாழினைப் புனைந்துரைப் பதில் மற்றைய புலவரோடு போட்டியிடு கின்றார். மூங்கில் தோலுரித்தாற் போன்ற துணியும், பாம்பு சீறினாற் போன்ற கள்ளும், வீமபாகத்தாற் சிறந்த விருந்தும், கலைஞருக்குக் கிட்டுமென்று சுட்டுகின்றார். மாடு பூட்டிய தேரும் தந்து, ஏழடிவந்து வழியனுப்புவான் என்று உறுதி கூறி முடிகின்றது இந்தப் பாட்டு, மற்றைய ஆற்றுப் படைகள் எல்லாம் நாடு கிழவோனே, மலைகிழவோனே என்று முடிவது போல் இது முடியவில்லை.