பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

செந்தமிழ் பெட்டகம்

தமிழில் அகராதி என்னும் சொல் முதன்முதல் காணப்பட்டது 1594-இல் சிதம்பர ரேவண சித்தர் என்பவர் அகராதி நிகண்டு என்ற நூலை இயற்றிய போதே ஆயினும் இப்போது வழங்கும் முறையில் அகராதியை முதன்முதல் வழங்கியவர் பெஸ்கி என்னும் பாதிரியார் அவர் 1732-இல் இயற்றிய சதுரகராதியே தமிழில் முதன்முதல் பிறந்த அகராதி என்று கூறலாம்

இதன்பின்னர்த் தமிழ்நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அகராதி பற்றிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இம்முயற்சிகளுள் மிகச் சிறப்பாகவுள்ளது வின்ஸ்லோ என்னும் பாதிரியார் 1862-இல் பதிப்பித்த தமிழ் ஆங்கில அகராதியாகும் அது மிகவும் பெரிய நூல் 67,452 சொற்கள் உடையது

நாளடைவில் வின்ஸ்லோவின் அகராதி எளிதில் கிடைக்கக் கூடியதாக இருக்கவில்லை அதனுடன் அதைப் பலவகையில் செப்பமடையச் செய்ய இடமிருந்தது. ஆகவே 1905-இல் சர் பிரடரிக் நிக்கல்சன், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழாசிரியராயிருந்த டாக்டா ஜீ யூ போப்பையர் சேகரித்துள்ள சொற்களையும் சேர்த்து, வின்ஸ்லோவின் அகராதியைப் புதுப்பித்துச் சென்னைப் பல்கலைகழகத்தின் வெளியீடாக வெளிவரவேண்டும் என்று சென்னை அரசாங்கத்துக்குச் சிபாரிசு செய்தார்

டாக்டர் போப்பையரே அதைத் தயாரித்து இங்கிலாந்தில் அச்சிடுவதென்று முதலில் எண்ணினர் அது நடைபெறவில்லை போப்பையர் 1907-இல் இறந்தபின் அவர் தயாரித்த கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன. அதைப் பயன்படுத்தி ஒரு நல்ல தமிழ் லெக்சிக்கன் தயாரிக்க வேண்டும் என்று சாண்ட்லர் பாதிரியார் சென்னை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்

சென்னை அரசாங்கம் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டது இறுதியில் தில்லியை ஆண்ட ஆங்கில