பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

225

இத்தகைய அரசனின் அங்கமே அரசாங்கம் அவற்றில் படை அரண், பொருள், குடி, நட்பு என்பவை குறளில் பின்னே கூறப் பெறினும், அவற்றை முன்னே கூறிவந்தோம் அரசாங்கம் என்றால் சிறப்பது அமைச்சரே ஆம் துரைத்தனம் அவரதே அன்றோ? அமைச்சர் வெளிநாட்டுக் கொள்கையும் அறிதல் வேண்டும் அரசனோடு பழகவும் ஆற்றல் வேண்டும்; அமைச்சர் குழுவினும், மக்கள் அமையினும், அரசர் அவையினும் பேசவல்லராதலும்வேண்டும்

செய்ய வேண்டும் செயல், அதைச் செய்யும் வழி, காலம், செயல்வகை, செயலின் பயன் என்றவை எல்லாம் அறிந்து, அஞ்சாமை, குடி காத்தல், கல்வி, அறிவு (நூலறிவு, மதிநுட்பம், இயற்கை அறிவு), ஆள்வினை முதலிய உடையராய்ப் பிற அரசினைப் பிரித்தலும் பொருத்தலும் வல்லவராய், ஆராய்ச்சியும் செயலும் சொல்வன்மையும் பெற்று, அறவழியில் திறமையுடைய வராய் விளங்குவதே அமைச்சர் சிறப்பு; அவையின் சிறப்பு அந்நாளைய தமிழகத்தின் சிறப்பு: அதனை வள்ளுவர் கூறும்போது இந்நாளைய குடியரசின் சட்ட சபைகளையே கூறுவது போலத் தோன்றுகிறது

சொல்வன்மை, அவை அறிதல், அவை அஞ்சாமை, துது என்ற அதிகாரங்கள், பேசும் திறம் அவையிற் பயன்படுகிற நுட்பத்தை விளக்குவன வாம் அரசனோடு பழகுதலே ஒரு கலை குறிப்பறிதலும் இதற்கு ஒத்த பெருங் கலையாம் செயற்படுதலன்றோ அரசியலின் முடிவு? நிருவாகம் என அரசியலை நிறைவேற்றுவோர் அமைச்சரே ஆவர். ஆதலின் இவர்கள் செயல் நிலையை வினைத் திட்பம் என்றும், வினை செயில்வகை என்றும் கூறுகிறார் வள்ளுவர் வினைத்திட்பம் மனத்திட்டமே ஆம் துளங்காது தூக்கம் கடிந்து செயல் வேண்டும் சூழ்ச்சியின் முடிவு துணிவெய்தலே. வினையால் வினையாக்கிக் கொள்ளும் நுட்பம் கூறுகிறார் வள்ளுவர்

செ பெ-15