பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் த. கோவேந்தன்

229

காளிங்கர், மணக்குடவர், பரிமேலழகர் என்பார் உரைகள் வெளியாகி உள்ளன பரிமேலழகர் உரையே சிறந்தது எனப் பலர் கொள்கின்றனர். ஆராய்ச்சியாளர் அவ்வுரையினையும் திருத்த முற்பட்டுள்ளனர் பரிப்பெருமாள், கவிராச பண்டிதர் முதலிய பின்வந்தோர் உரையும் வெளியாகி உள்ளன. இந்நூலுக்கு இன்றும் பலபல உரைகளும் மொழிபெயர்ப்புக்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன

திருவள்ளுவர் வாழ்வும் நெறியும்

திருக்குறள் எழுதிய ஆசிரியரின் பெயர் திருவள்ளுவர் என வழங்குகிறது. இவர் குலத்தால் வள்ளுவர் என்பர் சிலர் ஆதி என்கிற புலைச்சிக்கும் பகவன் என்கிற பார்ப்பனர்க்கும் இவர் பிறந்தார் என்று கபிலரகவல் என்ற நூல் கூறும் கபிலரகவல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கட்டிவிட்டதொரு நூல்போலும் எனக் காலஞ் சென்ற பாம்பன் சுவாமிகள் கூறக் கேட்டதுண்டு யாளிதத்தன் என்ற பார்ப்பனர்க்கும் ஒரு புலைச்சிக்கும் பிறந்ததாக ஞானாமிர்தம் என்கிற பழைய நூல் வள்ளுவரைச் சுட்டுகின்றது திருவள்ளுவரையும் திருக்குறளையும் புகழ்ந்து பாடும் திருவள்ளுவ மாலை கீழ்வரும் பாட்டில் வள்ளுவர் குலத்தைத்தான் சுட்டுகிறதோ என்ற ஐயமெழுகிறது

‘அறம்பொருள் இன்பம்வீடு என்னும் நான்கின்
திறம்தெரிந்து செப்பிய தேவை - மறந்தேயும்

வள்ளுவன் என்பான் ஓர் பேதை அவன்வாய்ச் சொல்
கொள்ளார் அறிவுடை யார்”
-மாமூலனார்

இந்த மாலை திருவள்ளுவர் காலத்திலேயே எழுந்ததென நம்புவதற்கில்லை ஆனாலும் நேமிநாத உரையிலும் கல்லாடத்திலும் இத் தனிப்பாடல் குறிக்கப் பெறுவதால் எண்ணுாறு, தொள்ளாயிரம் ஆண்டுகளாக இந்நூல் வழங்கி வருகிறது என்லாம்