பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

செந்தமிழ் பெட்டகம்

பாட்டுடை செய்யுள்
சிலப்பதிகாரம்

சிலம்பு காரணமாக விளைந்த நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் காவியம் ஆதலால் இது சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் இயைந்த காவியமாதலால், இயலிசை நாடகப் பொருட்டொடர்நிலைச் செய்யுள் என்றும், நாடக உறுப்புக்கள் பல உடையதாதலால் நாடகக் காப்பியம் என்றும், உரையும் இசைப்பாட்டும் விரவிய காரணத்தால் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றும் இது கூறுப்படும்

ஐம்பெருங் காவியங்கள் என்று தமிழில் போற்றப்படும் ஐந்து காவியங்களில் தொன்மைச் சிறப்பு உடையது சிலப்பதி காரம் இதனுடன் ஒரு காலத்ததாகக் கூறப்படுவது மணிமேகலையாயினும் சமயக் கொள்கையிலும் இலக்கியத் திறனிலும் இரண்டும் வேறுபட்டவை சிலப்பதிகாரம் சமண சமயக் கொள்கைகளைச் சிறப் பிக்கும் போக்கினதாயினும், பொளத்த சமயம் ஒன்றையே போற்றும் மணி மேகலை போல் ஒருதலைச் சார்பானது அன்று இந்த இரு காவியங்களும் சில உண்மைகளை எடுத்துரைத்து, மக்களைத் திருத்த வேண்டும் என்னும் குறிக்கோள் கொண்டனவே யெனி னும், சிலப்பதிகாரம் இலக்கியச் சுவையும் மிகுந்ததாக உள்ளது